Header Ads



'ஏர் ஏசியா' தேடுதல் வேட்டையில் 27 கப்பல்கள், 20 விமானங்கள்,

ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர்ஏசியா QZ8501 விமானத்தில் இருந்து இன்று மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டதாகவும், ஐந்தாவதாக ஒரு பெரிய பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர்.

இதற்கிடையே, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 90-க்கும் அதிகமான கப்பல்களும், விமானங்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. கடலின் ஆழப்பகுதியில் தேடும் பணிகளுக்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் நிலவரப்படி 30 உடல்கள் கடல்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய பலர் சீட் பெல்ட்களை அணிந்தபடி பிணமாக கிடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போர்னியோ நகர கடற்கரையோரத்தில் இருந்து சுமார் 1,575 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாவா கடற்பகுதியில் சுமார் 5 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உடல்கள் சிதறி கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆழ்கடல் பகுதியில் தேடுதல் பணியை மேற்கொள்ளும் அதிநவீன ரோவ் எனப்படும் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் கடலுக்குள் சென்று படங்களை எடுத்து வருகிறது. இந்த வாகனம், கடலுக்கடியில் கிடந்த ஏர் ஏசியா விமானத்தின் இரண்டு பெரிய பாகங்களை கண்டுபிடித்தது.

நேற்றைய தேடலில் மேலும் இரண்டு பெரிய பாகங்கள் கண்டுபிடிக்கபட்டதாக தேடல் மற்றும் மீட்பு நிறுவனத் தலைவர் பாம்பாங் சொலிஸ்ட்யோ கூறியிருந்தார். 

இந்நிலையில் இன்று மேலும் ஒரு உடலும், 9.8 x 1.1 x 0.4 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பெரிய பாகமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தேடுதல் வேட்டையில் 27 கப்பல்கள், 20 விமானங்கள், ரஷ்யாவை சேர்ந்த ஆழ்கடலில் தேடும் ஆளில்லா ’டைவர்’ உபகரணங்கள் போன்றவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்னும் 131 உடல்கள் மற்றும் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி ஆகியவற்றை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

No comments

Powered by Blogger.