25 ஆண்டுக்கு பிறகு ஈராக்கில் தூதரகம் திறக்கிறது சவுதி அரேபியா
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிரான வான்வழி தாக்குதலில் சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகள் உதவி வருகின்றன. இந்த நிலையில், இரு நாட்டின் தூதரக நட்புறவின் அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பாக்தாத்தில் தூதரகம் திறக்க உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஈராக்கில் கடந்த 1990-ம் ஆண்டு சதாம் உசேன் அதிபராக இருந்த போது, சவுதி அரேபியாவுடனான தூதரக உறவுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஈராக்கில் இருந்த தனது தூதரகத்தை சவுதி அரசு மூடியது. கடந்த 2004-ம் ஆண்டு சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, இருதரப்பிலும் நட்புறவு பாராட்டப்பட்டு வந்தாலும் தூதரகத்தை மீண்டும் அமைக்க சவுதி முன்வர வில்லை. கடந்த நவம்பர் மாதம் ஈராக் அதிபர் பவுத் மவுசம் சவுதிக்கு சென்று பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, ஈராக்கில் மீண்டும் தூதரகம் திறக்க உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், குழு ஒன்று ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Post a Comment