முஷரப்பை கொல்ல முயன்றவர், இன்று தூக்கிலிடப்பட்டார்
பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தளபதியும், முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷரப்பை கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டவர் இன்று தூக்கிலிடப்பட்டார்.
ராவல்பிண்டி நகரில் கடந்த 14-12-2003 அன்று பர்வேஸ் முஷரப்பை கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் உயிர் தப்பினார். இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக பாகிஸ்தான் விமானப்படையை சேர்ந்த 6 பேர் மீது குற்றம்சாட்டி ராணுவ கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது.
இதில் குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், சர்வதேச மனித உரிமை அமைப்பினர், சர்வதேச பொது மன்னிப்பு சபை ஆகியவற்றின் வேண்டுகோளை ஏற்று மரண தண்டனை கைதிகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை தூக்கிலிட்டு கொல்வதை பாகிஸ்தான் அரசு சில ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது.
சமீபத்தில், பெஷாவர் பள்ளியின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பேர் பலியாகினர். இதனையடுத்து, வழக்குகளில் தொடர்புடைய 6 மரண தண்டனை கைதிகள் கடந்த சில நாட்களில் வரிசையாக தூக்கிலிடப்பட்டனர்.
இந்நிலையில், பர்வேஸ் முஷரப்பை கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்ட நியாஸ் முஹம்மது என்பவர் இன்று தூக்கிலிடப்பட்டார்.
கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாபி மாவட்டத்தைச் சேர்ந்த இவரை தூக்கிலிடுவதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, சுமார் 10 ஆண்டுகளாக இங்குள்ள ஹரிப்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நியாஸ் முஹம்மது, நேற்று இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெஷாவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுவதையொட்டி, நேற்றிலிருந்தே பெஷாவர் சிறையின் சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்று அதிகாலை நியாஸ் முஹம்மது தூக்கிலிடப்பட்டார். இவருடன் சேர்த்து இந்த மாதத்தில் மட்டும் 7 தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு தூக்கிலிட்டுக் கொன்றுள்ளது.
இவர்களில் நியாஸ் முஹம்மது உள்பட 6 பேர் முஷரப்பை கொல்ல முயன்ற வழக்கில் மரண தண்டனை பெற்றவர்கள். மற்றொருவர் 2009-ம் ஆண்டு ராணுவ தலைமயகத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment