Header Ads



கடலும் ஆறும் ஒன்றாகியதால், ஒலுவிலில் உருவான புதிய தீவு

ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டு ஆறும் கடலும் ஒன்றாகச் சேர்ந்ததால் ஊரின் ஒரு பகுதி புதிய தீவாகியுள்ளதுடன் இப் பிரதேசத்திற்குள்ளே யாரும் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகத்தை அண்மித்திருந்த பிரதேசங்களில் அடிக்கடி கடலரிப்புகள் ஏற்பட்டு பல ஏக்கர் நிலங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் மீனவர் தங்குமிடங்களும் கடைகளும் ஏற்கனவே அழிவடைந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் கடற் பிரதேசங்கள் பாரிய கடலரிப்புக்குள்ளாகி ஒலுவில் துறைமுக வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் கடல்நீர் உடைப்பெடுத்து ஆறும் கடலும் ஒன்றாகச் சேர்ந்து புதிய தீவை உருவாக்கியுள்ளது. இதனால் அங்கிருந்த மீனவர்கள் வெளியேறியுள்ளனர்.

ஒலுவில் துறைமுக வடக்கு பிரதேசத்தில் வெளிச்ச வீட்டை அண்மித்து இருந்த பராக்கிரமபாகு சமுத்திரத்தின் களியோடை ஆற்றின் வடிச்சல் நீர் செல்லும் ஆற்றுடனேயே கடல் ஒன்று சேர்ந்துள்ளது. ஆறு இருந்த தடயம் கூட இல்லாத அளவுக்கு கடல் சென்றுள்ளது.

ஒலுவில் வெளிச்சவீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியையும் கடல் அழித்துள்ளது. 

No comments

Powered by Blogger.