நெடுஞ்சாலையில் சிதறிய 2 மில்லியன் டாலர்கள் - பணத்தை அள்ளிச்சென்ற பொதுமக்கள் (படம்)
ஹாங்காங்கில் வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் வேனில் இருந்த பணப்பெட்டி நெடுஞ்சாலையில் விழுந்ததால் 2 மில்லியன் டாலர் பணம் சாலையில் சிதறியது.
இதை கண்ட கார் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பணத்தை அள்ளிச்செல்ல போட்டி போட்டுக்கொண்டு ஓடி வந்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சிதறிக்கிடந்த பணத்தை அள்ளிய மக்கள் கிறிஸ்துமஸ் தினம் வெகு சிறப்பானதாக மாறியதை கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி மக்கள் சென்ற பிறகு, விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து சீல் வைத்தனர். எனினும் போலீஸ் வருவதற்குள் எவ்வளவு பணம் கொள்ளை போனது என தெரியவில்லை. 2 மில்லியன் டாலர் பணத்தில் எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பதும், மக்கள் எடுத்துச்சென்ற பணம் திரும்பக் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;
“வங்கிக்கு சொந்தமான பணத்தை வைத்திருப்பவர்கள், அதை உடனே காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்”. இல்லையென்றால் அவர்கள் மீது திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பரை வைத்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டால், பணத்தை வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment