10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன உறவுகள் - மீண்டும் பெற்றோருடன் சேர்ந்தனர்
(Mm)
2004 டிசம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி., வரவிருக்கும் பேராபத்து பற்றி எதுவும் அறியாத ஜமாலியா சுமத்ரா தீவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே துணிகளைக் காய வைத்துக் கொண்டிருந்தார். உள்ளே அவரது மூன்று குழந்தைகளும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரே ஒரு நொடியில் அவர்களின் வாழ்க்கையே மாறிவிட்டது,
பயங்கரமான பூகம்பத்தால் நிலைகுலைந்து இருக்கும் போது, ’அலை வருது...அலை வருது...’ என்று மக்களின் அலறல் கேட்டது. பதறிப் போன ஜமாலியாவின் குடும்பம் ஒரு வண்டியில் அவசரமாக கிளம்பியது.
இருந்தும் 500 மீட்டர் உயரத்திற்கு வந்த அலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.
விழித்துப் பார்த்தபோதுதான் தன் 4 வயது மகள் ஜன்னாவையும், 7 வயது மகன் ஆரிப்பையும் இழந்தது ஜமாலியாவிற்கு தெரிய வந்தது. இத்தனை வருடங்களில், பல இடங்களில் தேடியும் தன் குழந்தைகள் கிடைக்காத போதும் நம்பிக்கை இழக்காத ஜமாலியா நிச்சயம் தன் குழந்தைகள் உயிரோடு இருக்கும் என்று கண்ணீர் மல்க அருகில் உள்ள குடும்பத்தினரிடம் சொல்லி வந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவரது அண்ணன் ஜைனுதீன் தன் கனவில் மூன்று நாட்களாக ஒரு பெண் வருவதாக தன் தங்கை ஜமாலியாவிடம் சொன்னார். முதலில் அது தொலைந்து போன அவரது மகள் என்றே நினைத்தார். அடுத்த நாளே தன் கனவில் வந்த பெண்ணை ஒரு டீக்கடைக்கு அருகே சந்தித்தார். அந்த கடையின் உரிமையாளர் அந்தப் பெண் சுனாமியால் பெற்றோரை இழந்த அனாதை என்றதும், அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து தன் தங்கையிடம் காட்டியுள்ளார்.
பத்து வருடங்கள் ஆன போதும் ஜமாலியா அது தனது மகள் தான் என்று தீர்மானமாகச் சொன்னார். உடனே இருவரும் ஜன்னாவை சந்தித்தனர். ஜமாலியாவின் வீட்டிலிருந்து தொலைவிலுள்ள பான் யாக் தீவில் ஜன்னாவைக் கண்டெடுத்த மீனவர் ஒருவர் தனக்கு தெரிந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்த பத்து வருடங்களில் இது போல் மூன்று குடும்பங்களால் வளர்க்கப்பட்ட அந்தப் பெண் கடைசியாக சாம்னி எனும் வயதான பெண்மணியின் வீட்டில் இருந்த போது ஜமாலியா அவரைக் கண்டுபிடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
தன் மகளோடு சேர்ந்த சில தினங்களிலேயே தன் மகன் ஆரிப்பும் கிடைத்ததால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார் ஜமாலியா. இந்த சம்பவம் சுனாமியால் தன் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment