ஒவ்வொரு பிரச்னைக்கும் மோதல், தாக்குதல், நிகழ்ந்தால் உலகம் முழுவதும் வன்முறை களமாக மாறிவிடும்.
வாடிகன் உலக மக்கள் அனைவரும் மென்மையுடனும் இரக்கமுடனும் நடந்து கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தினருடன் நட்புடனும், சகோதரத்துவத்துடன் பழக வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தேவாலயங்களில் நேற்றிரவு முதல் ஜெபக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்றிரவு நடந்த கிறிஸ்துமஸ் தின கூட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, சிரியாவில் ஐஎஸ் வாதிகளால் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு சாட்டிலைட் போன் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார். பின்னர் கூட்டத்தில் போப் பேசியதாவது: உலகம் முழுவதும் தீவிரவாதம் உள்பட பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. இந்த பிரச்னைகளை தீர்க்க, நம் ஒவ்வொருவருக்கும் நேர்மையும் அரவணைத்து செல்லும் குணமும் தேவைப்படுகிறது.
அக்கம்பக்கத்தினருடன் நட்புடனும் சகோதர மனப்பான்மையுடனும் பழக வேண்டும். அப்போதுதான் நம் மனதில் நற்குணமும் சாந்தமும் நிறையும். உலக மக்களிடம் மென்மையான போக்கும், இரக்கமும் அதிகரிக்க வேண்டும். சமாதானத்தை அடிப்படையாக வைத்து பிரச்னைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் கடவுள் நல்ல ஒரு தீர்வை ஏற்படுத்தி தருவார். அதை விடுத்து, ஒவ்வொரு பிரச்னைக்கும் மோதல், தாக்குதல், உயிர் பலிகள் நிகழ்ந்தால், உலகம் முழுவதும் வன்முறை களமாக மாறிவிடும். இந்த கிறிஸ்துமஸ் தினம் முதல் அனைவரும் மென்மையாகவும், சகோதர மனப்பான்மையுடன் பழகுவதற்கு உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.
.jpg)
Post a Comment