Header Ads



அரசை வீழ்த்தும் முக்கிய சக்தியாக நாங்களே உள்ளோம் - அனுரகுமார

பொது எதிரணி தயாராக முன்னரே ஜனாதிபதி தனது தேர்தல் ஓட்டத்தினை ஓட ஆரம்பித்து விட்டார். தனித்து ஓடவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விரும்புகின்றார் என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அரசை வீழ்த்தும் முக்கிய சக்தியாக தாங்களே உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியில் கூட்டு சேரத் தயாரா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொது எதிரணியினை நாங்கள் ஆதரிக்க முன்னர் ஜனாதிபதி தேர்தலை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தல் அரசியல் அமைப்பிற்கும் சட்டத்திற்கும் முரணாக இடம்பெறுகின்றது. நீதிமன்றத்தின் சுயாதீனம் அழிக்கப்பட்டு நீதி தேவதை நீதியே அழிக்கப்பட்டு விட்டது. அரசின் விருப்பம் எதுவோ அதற்கேற்ப சட்டமும் நீதியும் வளைந்து கொடுக்கின்றது. இந்த நிலையில் இப்படியானதொரு தேர்தலை தடுக்க வேண்டுமே தவிர இதனை நடத்துவதற்கு அனுமதிப்பது அரசியல் யாப்பினை அவமதிக்கும் செயலாகி விடும். எனவே நாங்கள் இப்போதும் ஜனாதிபதி தேர்தலை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் முயற்சிகளையே எடுத்து வருகின்றோம்.

அதேபோல் ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் முன்னரே ஜனாதிபதி தனது தேர்தல் வேட்டையினை ஆரம்பித்து விட்டார். தேர்தல் ஓட்டப் போட்டியில் பொது எதிரணி ஓட ஆரம்பிக்கும் முன்னர் ஜனாதிபதி பாதித் தூரம் ஓடி விட்டார். தான் தனித்து ஓட வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொது எதிரணி களமிறங்கினால் தன்னால் ஓட முடியுமா என்ற பயம் இன்று அரசாங்கத்திடம் ஏற்பட்டு விட்டது. அரசாங்கத்தில் இருந்து பலர் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பிரதான பங்காளிக் கட்சிகள் தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கம் தனது பலத்தினை இழந்து விட்டது என்பதே உண்மை. எனவே இந்த சந்தர்ப்பம் எதிரணிகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் தமது சுயநலத்தினை பார்க்காது பொது கொள்கையில் ஈடுபட வேண்டும்.

அரசாங்கத்திற்கு சவாலான கட்சியாக ஜே. வி. பி. யே உள்ளது. எம்மை கண்டு அரசு அஞ்சியதன் காரணத்தினாலேயே ஊவா தேர்தலில் எம்மை இலக்கு வைத்து தாக்கினர். எனவே ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் எமது முழு பலத்தினையும் பயன்படுத்துவோம். ஆனால் எதிரணியில் களமிறங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.