''அது பொய்யென உறுதியாகியுள்ளது'' அர்ஜுன ரணதுங்க
இலங்கை அணியின் அவசர இந்திய கிரிக்கெட் சுற்றுப் பயணம் அவர்களின் உலகக் கிண்ண தயார் நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் படுதோல்விக்கான குற்றச்சாட்டை வீரர்கள் மீது திணிக்காமல் நாட்டு நிர்வாகிகள் பொறுப்புகூற வேண்டும் என அர்ஜுன தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடர் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு அவசர கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்துகிறது.
இதில் 5 ஒருநாள் போட்டிகளில் முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இத்தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இலங்கை அணியின் இந்த நிலைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம், விளையாட்டுத்துறை அமைச்சு, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சனத் ஜயசூரிய, மார்வன் அத்தபத்து மற்றும் தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுற்றுலா இலங்கை அணி வீரர்களுக்கு உலகக் கிண்ணத்திற்கான ஆயத்தப்படுத்தலுக்கு உதவும் என தேர்வுக் குழுத் தலைவர் ஜயசூரிய, பயிற்றுவிப்பாளர் அத்தபத்து போன்றோர் ஊக்கப்படுத்தியதாக அர்ஜுன கூறியுள்ளார்.
எனினும் அது பொய்யென உறுதியாகியுள்ளதாகவும் இலங்கை அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்திய தொடர் முடிவானதாக அவர் கூறியுள்ளார்.

Post a Comment