எனக்கு வந்த, எந்த சலுகைகளுக்கும் விலை போகாமல் இருக்கிறேன் - ஹரீஸ்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள “திவி நெகும” திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் திவி நெகும பயனாளிகளுக்கு வீடுகளை புதுப்பிப்பதற்கான “வளமான இல்லம்” திட்டத்தின் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று (2014.11.18) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல். எம். சலீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து சிறப்பித்த்துடன் கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவருமான அப்துல் மஜீட், மாநகர சபை உறுப்பினர்களான முன்னாள் பிரதி மேயரும் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஜ.எம். பிர்தௌஸ், முன்னாள் பிரதி மேயர் ஏ.ஏ. வஸீர், அமீர் ஆகியோருடன் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீட், திவிநெகும பிரதேச உத்தியோத்தர் ஏ.சி. அஹமட் நஜீம் , திவி நெகும அடிப்படை வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம். பர்ஹான் போன்றோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், “வளமான இல்லம்” என்ற இத்திட்டத்தின் முதற்கட்ட கொடுப்பனவான 2500 ரூபாய் இன்று வழங்கி வைக்கப்படும் அதே வேளை “திதுலன” அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மக்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வாழ்வாதார அபிவிருத்திக்கான உபகரணங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் “வீச் பார்க்” என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்காக அதி நவீன சிறுவர் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்கா ஒன்றை அமைப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். இவற்றுக்கு மேலதிகமாக பொது விளையாட்டு மைதானத்தை பூரணமாக அமைத்தல், பாடசாலைகளின் அபிவிருத்தி, மையவாடி சுற்றுமதில், சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி, உள்ளக வீதி அபிவிருத்தி, போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கி இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் பொறுப்புடனும் மிக அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை சுட்டிக்காட்டினார்.
இன்றைய சூழலில் இதை விடவும் 100 மடங்கு அபிவிருத்திகளை செய்யக்கூடிய நிலை இருந்த போதும் இறைவனுக்கு பயந்து அவனுக்கு பதில் சொல்ல வேண்டியன் என்ற வகையிலும் மக்களது உணர்வுகளுடன் இணைந்து அதனை மதித்து செயற்படுபவன் என்ற வகையிலும் எனக்கு வந்த எந்த சலுகைகளுக்கும் விலை போகாமல் இருப்பதனால் தான் உங்கள் முன்னால் நேர்மையாக எந்த உறுத்தலும் இல்லாமல் வெளிப்படையாக பேச முடிவதாகவும் கூறிய எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் எதிர்வரும் காலங்களில் கட்சி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே முடிவுகளை எடுக்கும் என்றும் அம்முடிவில் அனைவரும் நம்பிக்கை வைத்து கட்டுப்பட்டு நடக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் “வளமான இல்லம்” திட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட உதவித்தொகையும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

Post a Comment