Header Ads



சமுகப் புறக்கணிப்புக்களே, வன்முறைகளுக்கு வித்திடுகின்றன.

(சத்தார் எம் ஜாவித்) 

மனித வாழ்வியல் உள்ளாக்கத்தில் சமுகக் கட்டமைப்புக்களே முக்கியமானதாகும். முனித நாகரீம் தோன்றிய காலத்திலிருந்து மனிதனின் வளர்ச்சி நாளாந்தம் ஏதோ ஒரு விதத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டே வந்துள்ளன.

அவ்வாறானதொரு முன்னேற்றத்தின் வெளிப்பாடே இன்றைய நவீன வீஞ்ஞான யுகம் என்று கூறலாம். இந்த விஞ்ஞான யுகத்தின் தோற்றமும், வளர்ச்சியும் மனித வாழ்வியலுக்கு புத்துயிர் ஊட்டி பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தாலும் ஈற்றில் அவை முழு மனித சமுகத்திற்கும் சவாலானதொரு விடயமாக தோற்றம் பெற்றுள்ளது என்றால் அதனை மறுப்பதற்கும் இடமில்லை.

ஆரம்ப காலந்தொட்டு மனித சமுகம் குறிப்பாக அறிவு முதிர்ச்சியடைந்து வந்த காலத்தில் இங்கு காணப்பட்ட சமுகங்கள் அல்லது மனிதக் கட்டமைப்புக்கள் தத்தமது வாழ்வியல் வளர்ச்சிப்படிகளில் ஒற்றுமைப்பட்டவர்களாககே காணப்பட்டுள்ளனர்.

அவ்வாறானதொரு ஒற்றுமையின் அல்லது முன்னேற்றத்தின் வெளிப்பாடுகள் மனித சமுகம் பழமையிலிருந்து புதுமையின் தோற்றத்திற்கு அல்லது சொகுசு வாழ்வியல் வட்டத்திற்குள் உள்வாங்கப் பட்டுள்ளான் எனலாம்.

இவ்வாறான புதுமையான சொகுசு வாழ்வியல் இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இடையில் பாரியதொரு பின் விளைவுகளை அல்லது முறண்பாட்டுத் தன்மைகளை தோற்றுவிப்பதாகவே பரிணாமம் அடைந்துள்ளது.

இந்த பரிணாமத்தின் வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனிதனையும் சுயமான அல்லத தனி வழியில் அவன் நினைத்த விதத்தில் செல்வதற்கும் வழிகோலியுள்ளது. இது தற்கால சூழ் நிலையில் சமுகத்தில் பாரியதொரு சிக்கலாக உருவொடுத்து சமுக விழுமியங்கள் கொச்சைப்படுத்தப்படும் அல்லது அவற்றிற்கு எதிரான போக்குகளை ஏதோ ஒரு வழியில் தோற்று வித்து வருகின்றது எனலாம்.

இவ்வாறான நிலைமைகள் இலங்கை போன்ற பல்லின, பல்சமுக மக்கள் வாழும் நாட்டில் பாரியதொரு ஆபத்தான நிலைமைகளை தோற்று வித்து அதன் வெளிபாடுகள் இலங்கையின் இன நல்லிணக்கத்திற்கும், அதன் ஒருமைப்பாட்டிற்கும்  குந்தகத் தன்மைகளை ஏற்படுத்தி வருகின்றது.

இலங்கையில் பௌத்த மதக் கொள்கையுடையவர்கள் பெரும்பான்மையாகவும் அதற்கு அடுத்தபடியாக தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை உள்டக்கியதான பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய சமயங்களைப் பிரதிபலிக்கும் சமய ரீதியான மக்கள் இந்த நாட்டில் வாழுகின்றனர்.

இவ்வாறான பல்லின சமுகக் கட்டமைப்புக்குள் இனம் என்ற ஒரு விடயம் இன்று இலங்கையின் தலை விதியையே மாற்றி மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட இனப் பிளவுகளையே ஏற்படுத்தி மூன்று தஸாப்த இலங்கையின் கொடிய யுத்தக் கொடூரத்திற்கு மூல காரணமாக ஆனதையும் அதன் வடுக்களைச் சுவைத்த எவராலும் மறந்துவிட முடியாது.

மேற்படி நிலைமைகளுக்கான காரணங்கள்தான் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடாகும். இந்தப்பாடுகள் இலங்கையின் வரலாற்றுக் காலந்தொட்டு இருந்து வந்தாலும் இதன் உக்கிரக் கட்டங்கள் 1956ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம் இனவாதிகளால் முதல் முதலாக தோற்றுவிக்கப்பட்டது முதல் இலங்கையில் இன நல்லுறவுகளுக்கு இன்று வரை தொடராக உள்ளக ரீதியாக பிரச்சினைகள் காணப்பட்டு வருகின்றமையைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான பின்னயில் ஒரு இனத்திற்குச் சார்பான சட்டங்கள் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளும் சலுகைகளும் பறிபோவதற்கும், பெரும்பான்மை சமுகங்களைப் போல்  சிறுபான்மை மக்களும் தமது உரிமைகளை அனுபவிக்க முடியாது மாறாக  மறுக்கப்படுவதற்கு காலாக அமைந்தது.

இலங்கை ஒரு சிறிய நாடாகா இருப்பதால் இதனை பல துண்டுகளாக பிரிப்பதைவிட இந்நாட்டு மக்கள் என்ற வகையில் அனைவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுடன் அவரவர் அவரவரது தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொண்டு இலங்கையர் என்ற அடையாளத்துடன் வாழ்வதே சாலச்சிறந்தது இதன் மூலமே உன்தமான மனிதப் பெறுமானங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த விடயங்களை அகிம்சையாக பெற்று இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஆதங்கத்தில் சிறுபான்மைச் சமுகங்கள் குறிப்பாக தமிழ் சமுகம் காத்திருந்த போதெல்லாம் அதற்கான சாதகத் தன்மைகளோ அல்லது விட்டுக் கொடுப்புக்களோ அல்லது அவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற ஆட்சியாளர்களின் குறிக்கோல்களோ கிஞ்சித்தும் காணப்பட வில்லை என்றே கூறலாம்.

ஒரு சமுகம் இன்னொரு சமுகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்தையுமே அபகரிக்கும் கைங்கரியங்கள் அதிகரிக்கத் தொடங்கியதன் பின் விளைவுகளின் தோற்று வாய்கள்தான் 1980களுக்குப் பின்னரான வடபகுதி தமிழ் இளைஞர்களின் போராட்ட வரலாறுகளாகும்.

கிடைக்க வேண்டியதை அகிம்சையாக கேட்ட போதெல்லாம் உதறித்தள்ளிய இனவாதிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியாவது தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுகளே இலங்கையின் முப்பது வருடகாலம் உள்ளிட்ட பல வருடகால உரிமைப் போராட்டங்களாகும்.

இந்த நிலைமைகளுக்கு வித்திட்டவர்களும், அவற்றை வளர விட்டவர்களும் கடும்போக்கு அரசியல் வாதிகளும், அவர்களுடன் இணைந்து சிறுபான்மைச் சமுகங்களுக்கு எதிராக இனவாதச் சாயம் பூசியவர்களும்தான் காரண கர்த்தாக்களாகும்.

சமுகத்தில் வாழும் எல்லாச் சமுகங்களையும் அரவணைக்கத் தெரியாக முட்டாள்தனமான அரசியல் தலைமைகள் அக்காலத்தில் விட்ட பிழைகளும், அதன் மூலமான தவறுகளும் இலங்கையின் அபிவிருத்தியிலும், சமுக, அரசியல், கலை, கலாச்சாரங்களிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி விட்டன.

குறிப்பாக சிறுபான்மை மக்களும் இந்த நாட்டு மக்கள் என்ற என்னக் கருக்கள் அற்றவர்களாக எதையெடுத்தாலும் அவற்றை வழங்காது மறுப்பதும், விட்டுக் கொடுக்காமை போன்ற தன்மைகள் இலங்கை வாழ் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய வெறுப்புணர்களை தோற்று வித்து அதன் மூலம் இன முறுகள் நிலைமைகள் ஏற்பட பாலமாக அமைந்து விட்டது எனலாம்.

மேற்படி நிலைமைகள் தற்போது அரசியல் நீரோட்டத்தில் பல மாற்றங்களையும், சிறுபான்மை மக்களின் ஆதரவிலும் பெரும்பான்மைக்கு பிரச்சினையாக மட்டுமல்லாது ஈடு செய்ய முடியாதளவு சவாலாகவும் உருவெடுத்துள்ளதாக புத்தி ஜீவிகளின் கருத்துக்களில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது.

மேற்படிப் புத்தி ஜவீகளின் கருத்துக்களின்படி பல்லின சமுக கட்டமைப்புக்கள் காணப்படும் ஒரு நாட்டில் அவர்கள் அனைவரும் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற ரீதியிலேயே மதிக்கப்படுவதுடன், அரசியலமைப்புச் சட்டங்கள், நீதி, விசாரணைகள் எல்லாமே சமமானதாகவே பாரபட்சமற்ற விதத்தில் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற விடயங்கள்  தெளிவாகின்றன.

ஆனால் சிறுபான்மை மக்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்குகான சகல ஜனநாயக உரிமைகளும் தொடராகவே புறக்கணிக்கப்பட்டும், அவற்றை கேட்கும் போதெல்லாம் வழங்க மறுப்பதெல்லாம் இலங்கையின் சமுக மற்றும் கலாச்சார விடயங்களில் பின்னடைவுகளையே தோற்று வித்துள்ளது எனலாம்.

தமிழ் இளைஞர்கள் தமது உரிமைக்காக இந்த நாட்டையே பலகாலம் வேறாக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நிலைமைகளுக்கும் அதன் மூலம் வடகிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் சமுகங்கள் பட்ட துன்ப துயரங்கள் எல்லாவற்றிற்கும் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த பெரும்பான்மை அரசியல் தலைமைகளும், ஆட்சியாளர்களுமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியவர்கள்.

அவர்களின் விடாப்பிடி நிலைமைகள் சமுகச் சீர்கேடுகளுக்கும், வன்முறைகளுக்கும் வித்திட்டனவே தவிர எந்த விதத்திலும் அமைதிக்கும், சமாதானத்திற்குமான முன்நகர்வுகள் ஏற்பட வில்லை அல்லது கடைப்பிடிக்கப்பட வில்லை என்றே கூறலாம்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அல்லது கிடைக்க வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஒரு சாரார் அவற்றை ஏற்படுத்த முடியாது இருசாராரும் சேர்ந்துதான் தீர்க்க வேண்டும் அப்போதுதான் பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வுகள் கிட்டும் அதற்காகச் சில தியாகங்களைச் செய்யவும் வேண்டும்.

இலங்கை மக்களைப் பொருத்தவரை போர் என்ற வரையறைக்குள் தாராளமாகவே தியாகங்களை தமது உரிமைகளைப் பெறுவதற்காக செய்துவிட்டனர். இனியும் அவ்வாறான தியாகங்கள் தேவையில்லை மாறாக புரிந்துணர்வு என்ற தியாகத்துடன் செயற்பட வேண்டிய தருணங்களே தற்போது தேவையாகும்.

போருக்குப் பின் இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் அது அபிவிருத்தி விடயங்களில் முன்னேற்றங் கண்டாலும் சமுக முன்னேற்றங்கள் குறிப்பாக யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களின் விடயத்தில் அது உரிய முறையில் செல்வாக்குச் செலுத்த வில்லை என்ற வாதங்களே அதிகமாகப் பேசப்படுகின்றது. இதன் காரணமாகவே கடந்த முறை நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலிலும் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்காது தமது தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அவர்களின் முழு வாக்குகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பக்கு வழங்கி வடமாகாண சபையை கைப்பற்ற வைத்த விட்டது எனலாம்.

அரசாங்கத்திற்கு கூட வாக்குகளை வழங்கியிருந்தாலும் கூட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விடலாம் என்பதும் கூட மடமைத்தனம் என்றும் கூடச் சொல்லலாம். இனங்களுக்கிடையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாத வரையில் அங்கு சமாதானம் மலர்ந்து விடும் என்;று சொல்லிவிட முடியாது.

ஒரு இனத்தை மற்றய இனம் புறந்தள்ளும் முட்டால் தலமான செயற்பாடுகளை ஆதரிக்கும் அரசியல் தலைமைகளும், இனவாதிகளும் அந்த விடயங்களில் இருந்து தம்மை சற்று மாற்றிக் கொண்டு சமாதானமான வாழ்வியல் வழி முறைகளுக்கு மக்கள் சுதந்திரமாகச் செல்வதற்கான இடத்தைக் கொடுக்க வேண்டும்.

உண்மையில் இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெரும்பாலான இனவாதிகளுக்கு எந்தவிதத்திலும் இனக்கப்பாடுகள் சிறிதளவும் இல்லை என்பது கடந்தகால அனுபவங்கள் இம் மக்களிடத்தில் இருந்தே வருகின்றது.

பாதிக்கப்பட்ட சமுகங்கள் என்ற வகையில் சிறுபான்மை மக்கள் எதிர் காலத்தில் சிறந்த தீர்மானங்களை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்கள் அரசியல் ரீதியாக சிறுபான்மைச் சமுகங்களின் குறைகளைத் தீர்ப்பதற்கானதாக அமையுமானால் அதன் மூலம் சிறப்பானதொரு எதிர் காலத்தை நோக்கி நகரலாம்.

சிறுபான்மை மக்களின் புறக்கணிப்புக்கள் அரசியல் ரீதியாக இன்று தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற தற்காலத்தில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேர்தல்கள் ஒரு களமாக அமைகின்றது.

அந்த வகையில் கடந்த காலங்களில் உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தமது ஒற்றுமைப்படுதலின் மூலம் தேர்தல்களின் மூலம் அவற்றின் பிரதிபலிப்புக்களைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களும்  காணப்படுகின்றதால் தமது கடந்த கால கசப்புணர்வுகளை தூக்கியெறிந்துவிட்டு அதற்கான சிறந்த முனைப்புக்களை சிறுபான்மை அரசியல் தலைமைகள் எடுக்க வேண்டும் என சமாதான விரும்பிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

No comments

Powered by Blogger.