இலங்கை - இந்திய கிரிக்கெட் போட்டி சாதனைகளும், சோதனைகளும்
ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தனிநபராக அசத்திய கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடிக்க, இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5–0 என முதன்முறையாக முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது. இலங்கை தரப்பில் கேப்டன் மாத்யூஸ் சதம் வீணானது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் வென்ற இந்திய அணி 4–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று நடந்தது.
ஜாதவ் அறிமுகம்: இந்திய அணியில் கேதர் ஜாதவ் அறிமுக வாய்ப்பு பெற்றார். ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இலங்கை அணியின் அறிமுக துவக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா (4) ஏமாற்றினார். தில்ஷன் (35), சண்டிமால் (5), ஜெயவர்தனா (32) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
மாத்யூஸ் சதம்: பொறுப்பாக ஆடிய திரிமான்னே(52), ஒருநாள் அரங்கில் தனது 9வது அரைசதம் கடந்து அவுட்டானார். மறுமுனையில் அசத்திய மாத்யூஸ், கரண் சர்மாவின் 46வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (139 ரன்கள், 116 பந்து, 10 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.
கோஹ்லி அசத்தல்: எட்டக்கூடிய இலங்கை விரட்டிய இந்திய அணிக்கு ரகானே (2) மோசமான துவக்கம் கொடுத்தார். கடந்த போட்டியில் உலக சாதனை (264 ரன்கள்) படைத்த ரோகித் சர்மா (9) நேற்று ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் விராத் கோஹ்லி, அம்பதி ராயுடு ஜோடி அசத்தியது. காமகே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராயுடு, ஒருநாள் அரங்கில் தனது 5வது அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த போது ராயுடு (59) வீணாக ‘ரன்–அவுட்’ ஆனார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா (19), கேதர் ஜாதவ் (20) அஜந்தா மெண்டிஸ் ‘சுழலில்’ வெளியேறினர். இப்படி
விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுபுறம் அபாரமாக ஆடிய விராத் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 21வது சதத்தை பதிவு செய்து, நம்பிக்கை தந்தார்.
ஆட்டத்தின் 44வது ஓவரை வீசிய அஜந்தா மெண்டிஸ், முதலிரண்டு பந்தில் ஸ்டூவர்ட் பின்னி (12), அஷ்வின் (0) ஆகியோரை அவுட்டாக்க, ‘டென்ஷன்’ ஏற்பட்டது. இருப்பினும் மெண்டிஸ் வீசிய 49வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த கோஹ்லி, வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 48.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (139), அக்சர் (17) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை இலங்கை கேப்டன் மாத்யூஸ் வென்றார். தொடர் நாயகன் விருதை இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கைப்பற்றினார்.
1000 ரன்கள்
நேற்று அபாரமாக ஆடிய இலங்கை கேப்டன் மாத்யூஸ், ஒருநாள் அரங்கில் இந்த ஆண்டு 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர், 25 போட்டியில் பங்கேற்று ஒரு சதம், 8 அரைசதம் உட்பட 1062 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் விராத் கோஹ்லி (1054 ரன்கள்), இம்மைல்கல்லை எட்டினார்.
10
சிக்சர் மழை பொழிந்த இலங்கையின் மாத்யூஸ் (10 சிக்சர்), ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில், முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா (11 சிக்சர், எதிர்–பாகிஸ்தான், 1996) உள்ளார்.
4வது முறை
நேற்று பேட்டிங்கில் அசத்திய இந்தியாவின் விராத் கோஹ்லி, இந்த ஆண்டு ஒருநாள் அரங்கில் 1000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதன்மூலம், தொடர்ந்து நான்காவது முறையாக (2011–14) ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்தார்.
5வது இடம்
அசத்தலாக ஆடிய இந்தியாவின் விராத் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 5வது இடத்தை தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் தலா 21 சதம் அடித்துள்ளனர். முதல் நான்கு இடங்களில் இந்தியாவின் சச்சின் (49 சதம்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (30), இலங்கையின் ஜெயசூர்யா (28), இந்தியாவின் கங்குலி (22) உள்ளனர்.
அக்சர் அசத்தல்
இத்தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் அக்சர் படேல் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் 11 விக்கெட் வீழ்த்தினார். இவரை அடுத்து இந்தியாவின் உமேஷ் யாதவ் (10 விக்கெட்), குல்கர்னி (8), அஷ்வின் (6) ஆகியோர் உள்ளனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அஜந்தா மெண்டிஸ், மாத்யூஸ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
மாத்யூஸ் முதல்வன்
இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன்கள் வரிசையில், இலங்கை கேப்டன் மாத்யூஸ் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 339 ரன்கள் எடுத்தார். இவரை அடுத்து இந்திய கேப்டன் விராத் கோஹ்லி 5 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 329 ரன்கள் எடுத்தார். அடுத்த மூன்று இடங்களில் இந்தியாவின் ஷிகர் தவான் (283 ரன்), ரோகித் சர்மா (273), அம்பதி ராயுடு (250) ஆகியோர் உள்ளனர்.
முதல் முறை
நேற்றைய கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன்மூலம், முதன்முறையாக 5–0 என இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக இரண்டு முறை, 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வந்த இலங்கை அணியை 1–4 (1986–87), 1–3 (2009–10) என இந்தியா வென்றது.
* கடந்த 1982ல் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3–0 என முழுமையாக வென்றது. தற்போது 32 ஆண்டுகளுக்கு பின், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி உள்ளது.
* இரண்டு அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக 9 முறை இந்தியாவுக்கு வந்த இலங்கை அணியால் ஒருமுறை கூட தொடரை கைப்பற்ற முடியவில்லை. கடந்த 1997ல் இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என சமன் ஆனது. எட்டு முறை (1982–83, 86–86, 90–91, 93–94, 2005–06, 06–07, 09–10, 14–15) இந்தியா தொடரை கைப்பற்றியது.
ரசித்தார் அமித் ஷா
நேற்றைய போட்டியை பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, அரங்கில் இருந்து உற்சாகமாக ரசித்தார். இவரது வருகை இந்திய அணிக்கு வெற்றியும் தேடித் தந்தது.
‘ஹெலிகாப்டர் ஷாட்’
கடைசி கட்டத்தில் மெண்டிஸ் பந்தை தோனி மாதிரி ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடித்து வெற்றியை உறுதி செய்தார் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி. இதன் மூலம் அவரை போல தானும் ‘பினிஷிங்’ செய்வதில் கில்லாடி என்பதை நிரூபித்தார். தவிர, ராஞ்சியில் தோனி இல்லாத குறையையும் போக்கினார்.
இந்தியா ‘நம்பர்–1’
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5–0 என முழுமையாக கைப்பற்றியது. இதன்மூலம் ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) 117 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. அடுத்த இரண்டு இடங்களில் தென் ஆப்ரிக்கா (115 புள்ளி), ஆஸ்திரேலியா (114) அணிகள் உள்ளன. இலங்கை(108) 4வது இடத்தில் நீடிக்கிறது.
இப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கும் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில், 4–1 என கோப்பை வெல்லும் அணி முதலிடத்துக்கு முன்னேறலாம்.
வென்ற ‘139’
நேற்று இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, இலங்கை கேப்டன் மாத்யூஸ் ஒரே மாதிரியாக 139 ரன்கள் எடுத்தது அபூர்வமான விஷயம். இதில் கோஹ்லிக்கே வெற்றி வசமானது.
‘100’
நேற்று வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான சர்வதேச போட்டிகளில் 100வது வெற்றியை(83 ஒருநாள் போட்டி, 14 டெஸ்ட், 3 ‘டுவென்டி–20’) பதிவு செய்தது.
* கோஹ்லி கேப்டனாக 100 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளார்.

indian cricket team will perform only in their country. but, our lions will perform well anywhere in the world...
ReplyDeletewe are the one who made several world records against to india...
lost or win we always love our cricket team...
proud to be a srilankan.
It's not healthy to talk about the past always... We have to admit our faults and mistakes...
ReplyDelete