Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டால் அதற்கு தயாராக இருக்கிறேன் - ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி கேட்டுக் கொண்டால் அதற்குத்தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். 

எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாடு புறப்படுவதற்கு முன்னர் தனியார் தொலைக் காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார். அந்தப் பேட்டியின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்  ;  

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே போட்டியிட வேண்டுமென கட்சியை சேர்ந்த பலரும் விரும்புகின்றனர்.  அதேசமயம் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பேச்சுகளின் போது எதிரணிக் கட்சிகளுடன் பேசுவதற்கும் ஆதரவு வழங்குவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்தது.  ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய  தேசியக் கட்சி சார்பில் தன்னைப் போட்டியிடுமாறு கட்சி கேட்டுக் கொண்டால் அது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கத் தயாராகவே இருக்கின்றேன். 

எதற்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தல் வரும் வரை காத்துக் கொண்டிருக்கிறோம்.  ஐக்கிய தேசியக் கட்சி தற்போது ஒன்று பட்ட கட்சியாகவே இருக்கின்றது. கட்சியில் பிளவுகளோ  பிரிவுகளோ எதுவும் கிடையாது. ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்க கட்சி தயாராகவே இருக்கின்றது.  கட்சியில் சில விடயங்களில் மாறுபட்ட கருத்துகள் இருந்த போதிலும் அரசியல் கட்சி என்ற ரீதியில் நாம் ஒன்றுபட்டே இருக்கின்றோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.