ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர் - அனுரகுமார திசாநாயக்க
தற்போதைய நிலையில் நாட்டைப் பாதுகாப்பதற்கு இன்னொரு ஆயுதப் போராட்டத்தின் அவசியம் எழுந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர்களை நினைவுகூரும் கார்த்திகை வீரர்கள் தினம் நேற்று கொழும்பு விகாரமகா தேவி பூங்காவின் திறந்த வெளி அரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அனுரகுமார திசாநாயக்க,
ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம் நடத்திய காலங்களை விட நாடு இன்று பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு மொத்தமாக தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ராஜபக்ச குடும்பத்தினர் இன்னும் பல நூற்றாண்டுகள் அபிவிருத்தியில் பின்தங்கி இருக்கச் செய்யும் வகையில் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது.
1980 காலப்பகுதியை விட மோசமான அழிவுப் பாதையில் நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் இதனை மீட்டெடுக்க இன்னொரு போராட்டம் தேவை என்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய ஜனாதிபதி அதனை பகிரங்கமாக மீறிக் கொண்டிருக்கின்றார்.
எனினும் அதனை குறித்து எழுத ஊடகங்கள் அச்சப்படுகின்றன, நாட்டின் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அனைத்து வகையான வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, நாடு சீரழிந்துவிட்டது.
இதனை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பொறுப்பு நமக்கு உள்ளது ,அதற்காக ஜனநாயக வழியில் போராட ஜே.வி.பி. தயாராக உள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதைத்தான் சிறுபானமையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் ஆரம்பகாலம் தொட்டு சொல்லிக்கொண்டிருக்கின்றோம், ஆனால் இன்னும் பெளத்தர்கள் புரியவில்லை என்பதே கவலைக்குரிய விடயம். நாடு பெளதர்கள் நாடுதான் எமக்கொன்றும் அதில் பங்கு தேவையில்லை ஆனால் நாட்டின் பிரஜைகள் எந்த இனத்தவரானாலும் சுபீட்சமாக வாழவேண்டும். ஆனால் இவர்கள் நாட்டை கொள்ளையடிக்க நாட்டு மக்களின் பார்வையையும் எண்ணங்களையும் திசை திருப்ப அவர்களிடையே பிரச்சினைகளை உண்டுபண்ணி அதற்கிடையில் காரியங்களை சாதிக்கின்றார்கள். கொள்ளை தின்னிகள். இவைகள் அனைத்தையும் செய்துவிட்டு பேச்சுக்கு மட்டும் குறைவே இல்லை.
ReplyDelete