இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதற் தடவையாக..!
துறைக்கு பொறுப்பான அமைச்சர் இல்லாமல் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாதம் நடத்தப்படுகின்றமை குறித்து எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் இன்று 19-11-2014 கேள்வி எழுப்பினர்.
இன்றைய தினம் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சு அமைச்சு உள்ளிட்ட 11 அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.
எவ்வாறாயினும் நேற்று தமது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பாட்டலீ சம்பிக்க ரணவக்க இன்று நண்பகல் வரை சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.
ஜாதிக ஹெல உறுமையவின் ஏனைய உறுப்பினர்களும் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க வரலாற்றில் முதற் தடவையாக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இல்லாமல் அந்த அமைச்சுக்குரிய ஒதுக்கீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தன விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அமைச்சர் ஒருவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அந்த துறையின் பொறுப்புக்கள் ஜனாதிபதியின் கீழ் வருவதாக அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Post a Comment