சந்திரிகாவின் அரசியல் பிரவசேம், மகிந்தவிற்கு சவாலாக அமையும் - விஜித ஹேரத்
பொதுவேட்பாளர் என்பது ஐ.தே.க.வுக்கு உரியது அல்ல. ரணில் பொது வேட்பாளர் அல்ல. ரணில் ஐ.தே.க.வின் வேட்பாளர் மட்டுமே. பொது வேட்பாளர் பதவியை நிலைகுலைய வைத்தவர். அனைத்து எதிர்க்கட்சிகளினதும் சிவில் சமூகங்களினதும் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதவரே பொது வேட்பாளராக இருக்க முடியும். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும். சந்திரிகா மீண்டும் அரசியலுக்கு வந்தால் மகிந்தவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக செயற்படுவார். சந்திரிகாவின் அரசியல் பிரவேசம் மகிந்தவிற்கு சவாலாக அமையும் என ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜிதஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச்செவ்வியின் தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதா?
பதில் அரசியலமைப்பை தற்பொழுது மாற்றினாலும் மகிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது. அரசியலமைப்பு என்பது இந்நாட்டின் முக்கிய சட்டம். அரசாங்கத்திற்கு தற்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் அரசியலமைப்பு திருத்தம் என்னும்போது அரசாங்க உறுப்பினர்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. ஏனென்றால் அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றுவதற்கு முன்னர் ஒன்றுபடவேண்டும். நினைத்தவுடன் அரசியலமைப்பை மாற்ற முடியாது.
கேள்வி: வரவுசெலவுத் திட்டத்தை அரசாங்கம் இவ்வருடத்திற்குள் சமர்ப்பித்தமைக்கு என்ன காரணம்?
பதில் இந்த வரவு செலவுத்திட்டம் தேர்தலை நோக்காககொண்டது. நிவாரணம் வழங்குவதாக கூறி பலருக்கு சிறு சிறு இனிப்பு பண்டம்போல நிவராணம் கிடைக்கும். அத்துடன் கடன்தான் இந்த வரவு செலவுத் திட்டத்தின் அடுத்த நோக்கமாகும். அடுத்த வருடத்திற்கான இலங்கையின் கடன்தொகை ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடி என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ஜனாதிபதியின் நலன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை விட இம்முறை அதிகம். கால் நடைக்கு என கடந்த வருடம் (2014க்கு) 448 கோடி என நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் 410 கோடி ரூபா அதாவது 35 கோடி ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அப்படியானால் எப்படி உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கும்? தேர்தலையும் எவ்வாறு கடனைப் பெறலாம் என்பதே இந்த வரவு செலவுத் திட்டததின் முக்கிய நோக்கம். அதேநேரம் 25 % மின்கட்டண குறைப்பு, சமையல் எரிவாயுக்களுக்கு 250 ரூபா குறைதலும் தேர்தலை அடிப்படையாக கொண்டது. மின் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சாரத் துறை அமைச்சர் கூறியபோதும், ஜனாதிபதி திடீரென மின் கட்டணத்தை குறைக்கிறார். மின்சாரம் மக்களுக்கு அவசியம் என்பதை புரிந்து கொண்டு இவ்வாறு ஜனாதிபதி செய்துள்ளார்.
கேள்வி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விவாதங்கங்களின் போது ஐ.தே.க.வின் தலைவர் பொது வேட்பாளராக தேர்தலில் களமிறக்கப்பட்டால் ஜே.வி.பி. வேறு ஒரு தெரிவிற்கு செல்லும் என்று கூறியது. இன்று ஐ.தே.க. வேட்பாளர்தான் பொது வேட்பாளர் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன. தற்போது ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?
பதில்: ரணில் பொது வேட்பாளர் அல்ல. ரணில் ஐ.தே.க. வேட்பாளர் பொது வேட்பாளர் ஐ.தே.க.வுக்குரியதல்ல. பொது வேட்பாளர் எல்லா தரப்பிற்கும் இணங்கி செயற்பட கூடிய ஒருவராக இருக்க வேண்டும். பொது வேட்பாளர் பதவியை நிலையகுழைய வைத்தவர் ரணில். அனைத்து எதிர்க்கட்சிகள், சிவில் சமூகங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவராக இருக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் பொழுது ஜே.வி.பி .தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும். ஊடகங்கள் மட்டுமே இதுபற்றி பேசுகின்றதே தவிர அரசு தேர்தல் பற்றி பேசவில்லை.
கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுவது உள்ளிட்ட கருத்துக்களுடன் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் மாதுலுவாவே சோபித தேரருடன் இணைந்து முடிவெடுக்கும் சாத்தியப்பாடுகள் ஜே.வி.பி. மத்தியில் உள்ளனவா?
பதில் : இன்னும் அதுபற்றி பேசவில்லை. சோபித தேரரின் உறுதியான அந்த கருத்துக்களுடன் நாமும் இணைந்து செயற்பட தயார். ஆனால் இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கவில்லை.
கேள்வி: பிக்குகள் அரசியலில் களமிறங்கவுள்ளதாக வெளியாகியுள்ள அண்மைக்கால செய்திகள் தொடர்பில் உங்களது கருத்து என்ன?
பதில்: பிக்குகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எங்கும் குறிப்பிடவில்லை. அனைவரும் அரசியலுக்குள்ளேயே வாழ்கின்றோம். ஆனால், பிக்குகள் அரசியலுக்குள் வருவதால், ஏனைய தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்குள் எத்தகைய கருத்துக்கள் ஏற்படும்? பிக்குகள் அரசியலுக்கு வந்துதான் தற்போதைய பிரச்சினையை தீர்க்க முடியும் என்று கூறமுடியாது. பிக்குகளுக்குள்ள அரசியல் உரிமை போன்றே ஏனைய மதத்தலைவர்களுக்கும் அரசியல் உரிமை இருக்கிறது.
கேள்வி: ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோக பூர்வ தினம் அறிவித்த பின்னர் மக்கள் என்ன செய்யவேண்டும்?
பதில்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பற்றி மக்கள் இன்று நன்கு புரிந்து வைத்துள்ளனர். நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதாக கூறி பதவிக்கு வந்த அவர் சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்கின்றார். 2005, 2010இல் இதே உறுதிமொழியைத்தான் மக்களுக்கு வழங்கினார். இந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியும். சட்டத்தின் பிரகாரம் அவர் ஜனாதிபதியாக போட்டியிட முடியாது. இதனை மக்கள் புரிந்து மீண்டும் சர்வாதிகாரி ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டியது. உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் தான். எனவே, மக்களிடம் நாம் கேட்டுக்கொள்வது ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எப்படியும் பாராளுமன்ற தேர்தல் நடக்கும். அந்த தேர்தலில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குமளவிலான சக்தியை உடைய ஒருவரை நியமியுங்கள். ஜே.வி.பி. பாராளுமன்றில் சக்தி வாய்ந்த ஒரு கட்சியாக இருக்கிறது. அதனுடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமார துங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என கூறப்படுவது தொடர்பில் உங்களது கருத்து என்ன?
பதில் :எமக்கு தெரிந்தவரை தேர்தலில் போட்டியிடும் திட்டம் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால், மகிந்தவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக செயற்படுவார் என்று கூறமுடியும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவி என்ற வகையில் அவர் செயற்படுவார். எம்மை பொறுத்தவரை அவர் அவரது கட்சிக்குள் வரவேண்டும். அவருடன் கட்சி உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள் என்று அறிகிறோம். சந்திரிகாவின் அரசியல் பிரவசேம் மகிந்தவிற்கு சவாலாக அமையும்.
கேள்வி:ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோசலிஷ கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் என்பவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இவர் ஜே.வி.பி.க்கு சவாலாக இருப்பாரா?
பதில் :இந்த விடயமானது எங்களுக்கு தொடர்புபடாத ஒன்று ஆனால், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் ஜனாதிபதி தேர்தல் சவாலாக இருக்கும் என்று கூறமுடியாது. குமார் குணரட்ணம் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம் அல்ல.
கேள்வி:சாட்சிகள் பாதுகாப்பு சட்டமூலம் இன்னும் சட்டமாக்கப்படாமைக்கு என்ன காரணம்?
பதில் : சாட்சியங்களையும், சாட்சி வழங்குபவர்களினதும் பாதுகாப்பு குறித்த சட்ட மூலத்தை அரசு வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிராக பிரயோகிக்க வைத்துள்ளது. சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும் கட்சி என்ற வகையில் பாராளுமன்றில் இந்த சட்ட மூலத்தை சட்டமாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் எனவும் கூறிவருகின்றோம். பொய்யான வாதங்களையும், எடுத்துக்காட்டுக்களையும் கூறி பாதுகாப்பு சட்டமூலத்தை சட்டமாக்குவதில் காலதாமதத்தை அரசாங்கம் ஏற்படுத்துகிறது. மக்களை அச்சமான ஒரு சூழ்நிலையில் வைத்து ஆட்சி செய்ய இவற்றை அரசாங்கம் பயன்படுத்துகிறது.
.jpg)
Post a Comment