எதிர்வரும் தேர்தலின் பின், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் ரத்து - குணவங்ச தேரர்
சிங்கள பௌத்தர்களின் நிபந்தனையின்றிய ஆதரவு தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் என்று எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள கடும்போக்காளர்களின் முதல்நிலை பிக்குமார்களில் ஒருவரும், ஹெல உறுமய, பொதுபலசேனா போன்றவற்றின் ஆலோசனை சபை உறுப்பினருமான எல்லே குணவங்ச தேரர் , சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சகல விடயங்களிலும் பௌத்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
ஏனைய இனங்களின் எதிர்ப்புகளுக்கு அடிபணியாமல் பௌத்தர்களின் நலன் பேணல் விடயங்களில் அரசாங்கம் கரிசனையுடன் செயற்படுகின்றது.
பௌத்த மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப, அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து ஏனைய இனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை இதுவரை இந்த அரசாங்கம் ரத்துச் செய்யவில்லை.
இது தொடர்பில் நாங்களும் அரசாங்கம் மீது சற்று அதிருப்தி கொண்டுள்ளதை மறுக்கவில்லை.
ஆனாலும் எதிர்வரும் தேர்தலின் பின் பௌத்தர்களின் அந்த எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
இந்த அரசாங்கத்துக்கு எதிராக புலம் பெயர் தமிழர் உள்ளிட்ட புலி ஆதரவு சக்திகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின் இந்த அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச சதிகள் தீவிரம் பெற்றுள்ளன.
உள்நாட்டிலும் ஒருசிலர் இதற்கு ஆதரவளிக்கின்றனர்,எனினும் இந்நாட்டின் பௌத்தர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும்.
சிங்கள் அடையாளத்தை தொடர்ச்சியாக தக்க வைத்திருப்பதற்கும் மஹிந்த தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டும்.
ஏனைய இனங்கள் பௌத்தர்களின் மனம் கோணாமல் நடந்து, எமக்குப் பாதிப்பில்லாத வகையில் தத்தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு ஏற்ற சூழலை உருவாக்க மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும் என்றும் எல்லே குணவங்ச தேரர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Post a Comment