Header Ads



சுதந்திரப்போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி மரணம்

-tHOO-

சுதந்திரப்போராட்ட வீரரும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினருமான கேப்டன் அப்பாஸ் அலி மரணமடைந்தார்.அவருக்கு வயது 94.அலிகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து மாரடைப்பால் அவரது மரணம் நிகழ்ந்தது.அப்பாஸ் அலிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த அப்பாஸ் அலி, 2-வது உலகப்போர் துவங்குவதற்கு சற்று முன்பாக 1939-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை துவக்கி பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை துவக்கியபோது ராணுவ சேவையை துறந்து அப்பாஸ் அலி ஐ.என்.ஏவில்(இந்திய தேசிய ராணுவம்) இணைந்தார்.சிறிது காலத்திலேயே அவர் கைதுச் செய்யப்பட்டார்.ராணுவ நீதிமன்றம் அப்பாஸ் அலிக்கு மரணத்தண்டனை தீர்ப்பளித்தது.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அப்பாஸ் அலி விடுதலைச் செய்யப்பட்டார்.

ராம் மனோகர் லோஹியா, ஆச்சார்யா நரேந்திரதேவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகிய சோசியலிச தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்பாஸ் அலி அரசியலில் பங்கேற்றார்.

1966-ஆம் ஆண்டு ஒருங்கிணந்த சோசியலிச கட்சியின் உ.பி மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.சோசியலிச கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

அவசர நிலை பிரகடனத்தின்போது டிஃபன்ஸ் ஆஃப் இந்தியா சட்டத்தின் கீழ் அப்பாஸ் அலி கைதுச் செய்யப்பட்டார்.அவசர காலச் சட்டம் முடியும் வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

1977-ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்பட்டபோது அவரது கட்சி ஜனதா கட்சியில் சங்கமித்தது.உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஜனதா கட்சியின் உ.பி மாநில முதல் தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அலிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அப்பாஸ் அலி கலந்துகொண்டார்.அவரது உடல் கிலா சாலையில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.