எதிர் கட்சிகள் இன்னும் தயாராவில்லை..!
ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்ற கேள்வி இப்போது இல்லை. ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கவிருக்கின்றது. எப்படியும் ஜனவரி முதல் வாரத்துக்கு பிந்தாமல் நடக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயம். அரசாங்கமும் அந்த வகையான தகவல்களையே வெளியிடுகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எதிரணியில் களமிறங்கப் போவது யார் என்பதே இப்போதைய கேள்வி. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது யாராவது ஒரு பொது வேட்பாளரா? ரணில் விக்கிரமசிங்கவைக் கட்சி வேட்பாளராக நிறுத்தும் ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பேசவிருக்கின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி ஒரு தகவலை ஊடகங்களுக்குக் கசிய விட்டிருக்கின்றது. இது ஒரு உளவியல் பிரசாரம். ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டு ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு என்ற அமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தான் இவை.
இவற்றுள் அரைவாசி வெறும் பெயர் பலகைக் கட்சிகளே. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்தும் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவான குரல்கள் இடைக்கிடை வெளிவருகின்றன. எவ்வளவு தான் பூசி மெழுகினாலும் உட்கட்சி வெடிப்பு வெளிக்காட்டவே செய்யும். பொது வேட்பாளர் என்று இன்னும் ஒருவரும் இல்லை. பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தைப் பல மாதங்களாக முன்வைத்து வருகின்றார்கள். ஆனால் ஒருவரைத் தீர்மானிப்பதற்கு இன்னும் இவர்களால் முடியவில்லை. இது மிகப் பெரிய பலவீனம். இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்து தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கும் மகிந்தாவுக்கு எதிராக போட்டியிடுபவர் யாராக இருந்தாலும் பிரசாரத்தை இதுவரையில் ஆரம்பித்திருக்க வேண்டும். வேட்பாளர் யார் என்பதே இன்னும் முடிவாகாத நிலையில் பிரசாரத்தை ஆரம்பிப்பது எப்படி? எதிரணியின் சார்பில் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்ற ஒரேயொரு விடயம்"மகிந்தவுக்கு முடியாது' என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்குகள்தான்.
சில சட்டத்தரணிகளும் ஆய்வறிவாளர்களும் முன்னின்று நடத்தும் இக் கருத்தரங்குகள் மூன்றாவது தடவையாக மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்குச் சட்டத்தில் இடமில்லை என்பதை வலியுறுத்துவதையே நோக்கமாகக் கொண்டவை. இது உச்ச நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டப்பிரச்சினை. முன்னாள் பிரதம நீதியரசர் உட்படச் சில முக்கியஸ்தர்கள் மூன்றாவது தடவையாக மகிந்த போட்டியிட முடியாது என்கின்றனர். பதினெட்டாவது திருத்தத்தின் கீழ் எத்தனை தடவையும் ஒருவர் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடலாம் என்று அரசாங்க தரப்பினர் வாதிடுகின்றனர். இக்கருத்தரங்குகளை தேர்தல் பிரசாரமாகக் கருத முடியாது. எனினும் சட்டரீதியாக முடியாது என்று திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் மகிந்தவுக்கு எதிரான உணர்வலையைத் தோற்றுவிக்கலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அரசாங்க தரப்பிலும் ஒரு மறுத்தாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. அரசாங்கத்தை ஆதரிக்கும் கடுங்கோட்பாட்டாளர்களான எல்பே குனவன்ச தேரோ, சீ.ஏ.சந்திரப் பெரும, சட்டத்தரணி கோமின் தயாசிறி ஆகியோர் இதனை ஏற்பாடு செய்கின்றனர்.
பௌத்த சிங்களக் கடுங்கோட்பாட்டாளரான முன்னாள் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் என்.கியூ.டயஸின் மகன் தான் கோன் தயாசிறி. "மகிந்தவுக்கு முடியும்' என்பது இக் கருத்தரங்கின் தலைப்பு. ஊவாவில் வீசிய அலை நாடு முழுவதிலும் வீசும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கணக்குப் போடுகின்றது.சிறுபான்மையினர் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்திருக்கின்ற நிலையில், பல்லின மாகாணமான ஊவாவில் வீசிய அலையையிட்டு எதிரணி திருப்தி கொள்ள முடியாது. தமிழ் வாக்காளர்கள் அதிகமாக உள்ள பசறைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்ட முடியாமல் போவதை விசேடமாகக் குறிப்பிடலாம். ஊவா முடிவை வைத்து ஜனாதிபதித் தேர்தல் முடிவைத் தீர்மானிக்க முடியாது.
பொதுவேட்பாளர் அணியின் இரண்டு பலவீனங்களைக் குறிப்பிட வேண்டும். வேட்பாளர் யாரென்று இதுவரையில் தீர்மானிக்க முடியாமலிருப்பது ஒரு பலவீனம், வேலைத்திட்டம் எதுவும் இல்லாமல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் களமிறங்குவது மற்றைய பலவீனம், இக் கோரிக்கை பரந்த அளவில் வெகுஜன ஆதரவைப் பெறக்கூடியதல்ல. மக்களுக்கு இனப்பிரச்சினை உட்பட, வேறு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கான தீர்வை உள்ளடக்கும் வேலைத்திட்டம் இல்லாமல் மக்களைக் கவரமுடியாது. எதிரணி வேட்பாளர் யாராக இருந்தாலும் வேலைத்திட்டம் இல்லையென்றால் வெறும் சிலுசிலுப்பாகவே முடியும்.

Post a Comment