கல்முனைக்குடி பெரிய பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
(ஆதிப்)
கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளுக்கு எதிராக மு.கா. உயர்பீட உறுப்பினரும், கல்முனை மாநகர முதல்வரின் இணைப்பாளருமான எம்.எஸ்.எம். சத்தார் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் செய்த வழக்குத் தாக்கலை அடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு விதித்துள்ளது.
இது விடயமாக தெரியவருவதாவது,
கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்து எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று இப்பள்ளிவாசலினை வைபவ ரீதியாக திறப்பதற்கான நடவடிக்கையினை பள்ளிவாசல் தலைவரும் வைத்தியருமான எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையிலான நம்பிக்கையாளர் சபையினர் மிகவும் சிரமத்துடன் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்.
இதன் அபிவிருத்திப் பணிகளின் ஒன்றான பள்ளிவாசல் சுற்றுமதில் மிக அழகான தோற்றத்தில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இச்சுற்றுமதில் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு கோரி மு.கா. உயர்பீட உறுப்பினரும், கல்முனை மாநகர முதல்வரின் இணைப்பாளருமான எம்.எஸ்.எம். சத்தார் மற்றும் எம்.ஏ. தஸ்லீம் ஆகியோர் இணைந்து கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதனை அடுத்து கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.முகைதீன் 14 நாட்களுக்கு நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவினை வழங்கியுள்ளார். இவ்வழக்கின் சார்பாக சட்டத்தரணி யூ.எம்.நிசார் ஆஜராகியிருந்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 13ம் திகதி கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு சென்று தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸினை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது முதல்வர், பள்ளிவாசல்; சுற்றுமதில் நிர்மாணப் பணிகள் என்னுடைய அனுமதி பெறாமல் இடம்பெறுகின்றது. இது முற்றிலும் தவறான விடயம் என தலைவரிடம் தெரிவித்திருக்கின்றார். பள்ளிவாசல் அல்லாஹ்விடம் வீடாகும். இதற்கான நிர்மாணிப் பணிகளை ஜம்மியதுல் உலமாவின் அனுமதியினை பெற்று இப்பணியினை செய்து வருகின்றோம். தங்களிடம் அனுமதி பெறவில்லை என்பதற்காக இப்பணிகளுக்கு எதிராக தாங்கள் செயற்படவேண்டாம் என இதன்போது தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான நிலையிலேயே இத்தடை உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நீதிமன்ற தடை உத்தரவினால் கல்முனை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.
கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் சுற்றுமதில் மிக அழகான முறையில் இஸ்லாமிய மரபினை பறைசாற்றக் கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இச்சுற்றுமதில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அழகினை கண்டு இப்பிராந்திய மக்கள் மட்டுமல்லாது அனைவரும் மெச்சுகின்ற இவ்வேலையில், முதல்வரின் இணைப்பாளர் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் இணைந்து இதன் நிர்மாணப்பணிக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று இவ்வேலைத்திட்டத்தினை நிறுத்தியுள்ளதானது கல்முனை மக்களை விசனத்துக்குள்ளாக்கியுள்ளது.

அவர் என்ன சொல்ல வாருவாரோ தெரியாது. இருப்பினும் நீதி மன்ற தடை உத்தரவுவரை வந்தது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது முதலில் முஸ்லிம்கள்தான் அவர்கள் ஊடாகத்தான் மற்றவர்கள்.
ReplyDelete