Header Ads



''சிங்களவர்கள் வாக்களிக்காது விட்டிருந்தால், அதாவுல்லாவினால் அமைச்சராகி இருக்கமுடியாது'' - விமலவீர திஸாநாயக்க


(எம்.எம்.ஜபீர்)

தேர்தல் காலங்களில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாக்களிப்பதில்லை. ஆனால் சிங்கள மக்கள் கடந்த தேர்தலில் பேரியல் அஷ்ரப்பிற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை வழங்கினார்கள். அமைச்சர் அதாவுல்லாவிற்கு சிங்கள மக்கள் 5ஆயிரம் வாக்குகள் வழங்காவிட்டால் அவர் இன்று அமைச்சராக இருக்க முடியாது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது யுத்தத்தில் மக்களை கொன்று குவிக்க கட்டளையிட்ட  கொமன்டர் ஜெனரல்  சரத் பொன்சேக்காவிற்கு தமிழ் மக்கள் அதிக வாக்குகளை வழங்கினார்கள். ஆனால் அரசியல் தலைவராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எந்தவித வாக்குகளையும் வழங்கவில்லை. அதற்காக நாம் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யாமல் புறக்கணிக்கவில்லை.

நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் மட்ட கூட்டம் இன்று (04) வெள்ளிக்கிழமை பிரதேச சபை நூலக கேட்போர் கூடத்தில் நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர்    ஏ.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.குணரெத்தினம், எம்.ஜ.எம்.தஜாப்தீன், ஏ.சுதர்சன், ஏ.கே.அப்துல்சமட், வை.தேவன், சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஜாபிர், நாவிதன்வெளிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.செல்வநாதன், கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் என்.சகாசீலன், நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைக் கட்டிடம், குடிநீர் பிரச்சினை, பாடசாலைகளின் உள்ளக தேவைகள், தொழில்நுட்ப ஆய்வு கூடங்களிற்கான வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு விசேட வேலைத்திட்டங்களை செயற்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், தன்னால் முடியுமான அனைத்து விடயங்களிற்கும் துரிதமாக தீர்வு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் உள்ள நாவிதன்வெளி பிரதேச சபைக்கு  அரச தரப்பு மாகாண சபை அமைச்சர் ஒருவர் முதல் தடைவையாக இன்று விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்து போன்ற தேவையற்ற வார்த்தைகளால் இனங்களுக்குள் பிரச்சினை...

    ReplyDelete

Powered by Blogger.