Header Ads



இதுவரை காலமும் சிறுபான்மையின கட்சிகள் எங்களை ஏமாற்றின, இனிமேல் நாங்கள் ஏமாற போவதில்லை

ஐக்கிய தேசிய கட்சி இனிமேல் சிறுபான்மையின பங்காளி கட்சிகளின் உதவியை நாட போவதில்லை. அக்கட்சிகள் எச்சந்தர்ப்பத்திலும் எங்களை ஏமாற்றுவதிலேயே குறியாகவுள்ளது. இனிமேல் எமது கட்சியின் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கே கட்சி முன்னுரிமை வழங்கும் என்று ஐ.தே.க. கொழும்பு மாவட்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வனாத்தமுல்லை சுனிலை கடத்தியதனூடாக நாட்டின் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அரசே கடத்தி இருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அரசே தகவலை வழங்கியுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் விதத்திலேயே செயற்படுகிறது. ஆனால் ஐ.தே.கட்சி அதற்கு மாறாக செயல்படுகிறது. அனைத்து இனத்தவர்களுக்கும் சமமான அந்தஸ்தினை வழங்கி நாட்டை ஐக்கியப்படுத்துவதே நமது நோக்கமாகும். தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட இவ்வரசாங்கம் இனவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு விட்டனர்.

கடந்த காலங்களில் ஐ.தே. கட்சியின் பங்காளிகளாக செயற்பட்ட மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் தற்போது தனித்து போட்டியிடுவதுடன் அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர். குறித்த கட்சியினரின் வெற்றிக்காக ஐ.தே.கட்சி அங்கத்தவர்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். இருப்பினும் தற்போது ஐ.தே.கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டனர்.

இதேவேளை தற்போது இவ்வரசு பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களை உடைக்கின்றன. இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் யாரும் குரல் கொடுப்பது கிடையாது. ஐ.தே.க.வின் ரவி, ரோஸி, ரணிலே குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இவர்கள் அமைதியாக இருந்து மக்களுடைய வாக்குகளை தட்டிப்பறிப்பதில் குறியாக உள்ளனர்.

ஆகவே இனிமேல் சிறுபாண்மையின கட்சியினரை நாடப்போவதில்லை. மாறாக எமது கட்சியின் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கே முன்னுரிமை வழங்கவுள்ளோம். இதுவரை காலமும் சிறுபான்மையின பங்காளி கட்சிகள் எங்களை ஏமாற்றியே வந்தது. இனிமேலும் நாங்கள் ஏமாற போவதில்லை.

அத்துடன் வனாத்தமுல்ல வீட்டு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி அப்பிரதேச செயற்பாட்டாளரான சுனிலை கடத்தினர். இதனூடாக இந்நாட்டின் தமிழ் மற்றும் முஸ்லிம்களையும் அரசாங்கமே கடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகத்தை பரப்பி ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் இத்தகவலை அரசாங்கமே  வழங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் ஊழல் மோசடிகள் அதிகரித்து விட்டன. ஆகவே இவ்வூழல் மோசடிகளை மக்களினாலேயே நிவர்த்தி செய்ய முடியும். எனவே இனவாதம், ஊழல், மோசடிகளற்ற நாட்டை ஐ.தே.க. வினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என்றார்.

1 comment:

  1. இதுபோன்ற ஒவ்வொரு விடயமாக திட்டமிட்டு திட்ட மிட்டே நீங்க கெட்டு குட்டி சுவராயிட்டீங்கப்பா. முதுகெலும்பே இல்லையாம் இதில விலா எல்லும்ப பத்தி பேச்சாம்....

    ReplyDelete

Powered by Blogger.