Header Ads



ஜெனிவா அச்சுறுத்தலை ராஜபக்ஷவினர் தமக்கு எதிரான சூழ்ச்சி எனக் கூறுகின்றனர் - கரு ஜயசூரிய

ஜெனிவா மனித உரிமை பிரச்சினை தொடர்பில் இலங்கை மிகவும் ஆபத்தை நோக்கி தள்ளப்பட்டு வருவதாகவும் இந்த ஆபத்தை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வெல்லும் துரும்புச் சீட்டாக பயன்டுத்தி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜெனிவா அச்சுறுத்தல் மற்றும் ராஜபக்சவின் அது சம்பந்தமாக முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜெனிவா அச்சுறுத்தலை ராஜபக்ஷவினர் தமக்கு எதிரான சூழ்ச்சி எனக் கூறுகின்றனர். உண்மை என்னவொன்றால், ஜெனிவா பிரேரணை இலங்கையின் பொருளாதாரத்தில் தளர்வை ஏற்படுத்த காரணமாக அமையலாம். ஜெனிவா மனித உரிமை பிரச்சினை என்பது நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிரான பிரச்சினை.

அதனை சரியான முறையில் கையாள அரசாங்கம் தவறினால் அது நேரடியாக இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ராஜபக்ஷவினருக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

நாட்டு மக்களுக்கே தடைகள் ஏற்படும். இதனை ராஜபக்ச அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ராஜபக்ஷ அரசாங்கம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

மக்களுக்கு அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்பதால், அரசாங்கம் ஜெனிவா குறித்து கூக்குரல் இட்டு வருகிறது. இதனை விடுத்து ஜெனிவா முடிவுகளால் மகிந்த ராஜபக்ஷ மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லப்படுவார் என்று கூறுவது முட்டாள்தானமானது.

சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக இருக்கும் உண்மையான ஆபத்தை நாட்டு மக்கள் என்ற வகையில் நாம் அனைவரும் உணரவேண்டும். இதனை நாட்டுக்கு புரிய வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை. இதன் மூலம் அரசாங்கம் நாட்டுக்கு துரோகமிழைத்து வருகிறது.

முப்பது வருட போரின் இறுதியில் கொடூரமான மனித கொலைகள், போர் குற்றங்கள் இடம்பெற்றதாக இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அது குறித்து உரிய விசாரணைகளை நடத்தி நாடு குற்றம் செய்யவில்லை என்பதை வெளிக்காட்டி நாட்டை பாதுகாக்காதது எமக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அப்படியான விசாரணைகளை நடத்துமாறு மூறுவதை அரசாங்கம் தேசத்துரோகம் என நினைக்கின்றது.

இராணுவத்தினால் மேற்கொள்ளப்படாவிட்டாலும் சில நபர்கள் எந்த சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்று கூறி பொறுப்புமிக்க அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்க முடியாது.

கதிர்காமம் பிரேமவதி மன்னம்பேரி சம்பவம் 1971 ஆம் ஆண்டு புரட்சியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டாகும். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் லண்டன் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை தட்டிக்கழிக்கவில்லை. நியாயமான விசாரணைகளை நடத்தி பொறுப்பாளிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது. அதில் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கிறிஸாந்தி குமாரசாமி என்ற சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த சம்பவம் 1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைதடி இராணுவ முகாமில் நடந்தது.

இந்த சம்பவம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி எழுப்பியது. மேற்படி குற்றச்சாட்டை சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசாங்கம் தட்டிக்கழிக்கவில்லை. மாறாக நியாயமான விசாரணைகளை நடத்தி பொறுப்பாளிகளுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்தது. அதில் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் சம்பவம் சிங்கள பிரதேசத்திலும் இரண்டாவது சம்பவம் தமிழ்ப் பிரதேசத்தில் இடம்பெற்றன. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் தலைவிகள் நேரடியான நடவடிக்கைகளை எடுத்தனர்.

நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இனவாதி போராட்டங்களோ, இராணுவ கிளர்ச்சியோ ஏற்படவில்லை. எனினும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நடத்தை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் கூட வெட்கப்பட வேண்டும்.

நாடு எதிர்நோக்க வேண்டிய இந்த குற்றச்சாட்டுக்கு பாதுகாப்புச் செயலாளரே பதிலளிக்கின்றார். இப்படியான விசாரணையினால் இராணுவம் சௌகரியத்திற்கு உள்ளாகும் என்று அவர் கூறுகின்றார். இது நகைப்பை ஏற்படுத்தும் விடயம்.

அப்படியானால் 30 வருட போரை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத் தலைவரான சரத் பொன்சேகாவை ஏன் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கினீர்கள்?.

ராஜபக்சவினருக்கு எதிராக அரசியல் ஈடுபட்டார் என்ற காரணத்திற்காகவா அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது?. பொன்சேகா இராணுவ நடவடிக்கையின் போது பல தடவைகள் காயமடைந்த ஒருவர்.

இது மட்டுமல்ல, ராஜபக்ச அரசாங்கம் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக போர் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. அவர்கள் நாட்டுக்கு வந்த நமக்காக செயற்பட்டனர்.

அதேபோல் விடுதலைப் புலிகள் மீதும் போர் குற்றங்களை சுமத்துகிறது. புலிகளின் போராளிகளின் பெரும்பாலானவர்கள் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

அரந்தலாவ பிக்குகள் கொலை, கிழக்கில் நிராயுத பணிகளாக இருந்த பொலிஸார் கொல்லப்பட்டமை என்பன இவற்றில் இணையானவை. இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்றம் சுமத்தப்படும் நபர்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இவர்களில் செயற்பாடுகளால் முப்படை உறுப்பினர்கள் பல சித்திரவதைகளுக்கு உள்ளானதுடன் கொலை செய்யப்பட்டனர்.

எனினும் அந்த நபர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புடன் அமைச்சர் பதவிகளை வகித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக இருக்கின்றார். இது குறித்து பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதியான மகிந்த ராஜபக்ச கருத்துக்களை வெளியிட வேண்டியுள்ளது. இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு உதாரணமாக அமையாது.

கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்றும் சர்வதேசத்தால் தேடப்படும் பயங்கரவாதியாவார். அவரும் அரசாங்கத்தின் பாதுகாப்புடன் சுகபோகமாக இருந்து வருகிறார்.

அரசாங்கத்தின் மனத்தை வென்று அல்லது தொழில் பொறுப்பு, உத்தியோகபூர்வ பொறுப்புகளில் இருந்தன் காரணமாக ஒரு குற்றவாளி நல்லவராக போவதில்லை.

முக்கியமான படையினர் இராணுவத்தின் ஒழுக்கங்களை மீறியிருந்தால், அவர்களை போர் வீரர்கள் என்றோ இராணுவ வீரர்கள் என்றோ கருதுவதில்லை. சரத் பொன்சேகாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது போன்றதே இதுவும் என கரு ஜயசூரிய தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.