ஜம்மியத்துல் உலமாவின் வவுனியா, மன்னார் கிளைகள் இந்திய தூதரகத்திற்கு மகஜர் கையளிப்பு
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வடமாகாண முஸ்லிம்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வீடமைபு திட்டத்தில் பாகுபாடு காட்டவேண்டாம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வவுனியா, மன்னார் மாவட்ட கிளைகள் இணைந்து இந்திய தூதரகத்திற்கு இன்று வியாழக்கிழமை (13) மகஜர் கையளிப்பு. அதன்பின் அவர்கள் கொழும்பு ரேனுகா ஹோட்டலில் பத்திரிகையாளர் மாநாடொன்றையும் நடாத்தினர்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வவுனியா, மன்னார் மாவட்ட கிளைகளின் சார்பாக தலைவர் மௌலவி என்.பி.ஜூனைத், உப தலைவர் மௌலவி எஸ்.எச்.தாஹிர், செயலாளர் மௌலவி எஸ்.சிப்லி மற்றும் பொருளாளர் மௌலவி எம்.நௌபான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு கையளித்துள்ள மகஜரில் கூறப்பிட்டுள்ளதாவது,
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் பல அழிவுகiளையும் பல கஷ்டங்களையும் எதிர்நோக்கியது. மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் பலவந்தமாக தழிழீஈழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு பத்தளம், குருநாகல், கொழும்பு போன்ற பல பிரதேசங்களில் சிதறி வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல் 2008 ஆம் ஆண்டு மே மாதமளவில் யுத்தத்தினால் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா மெனிக் பாம் முகாமிலும் இன்னும் பல முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தினாலும், அரச சார்பற்ற நிறுவனங்;களினாலும் பராமரிக்கப்பட்டனர். இவ்வாறு முகாம்களில் இருந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் பல உலக நாடுகளின் உதவிகளைப் பெற்று அந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
இதனடிப்படையில் இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டிக்கொடுக்க முன்வந்தமைக்காக இந்திய அரசுக்கும், அந்நாட்டு நாட்டு மக்களுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம். இதனடிப்படையிலேயே வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் 40 தமிழ் கிராமங்களும் 27 முஸ்லிம் கிராமங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் எட்டு கிராமங்கள் மற்றும் ஒரு சிங்கள கிராமம் ஆகியன உள்வாங்கப்பட்டு முதலாம் இரண்டாம் மூன்றாம் கட்டங்களாக இவ்வீட்டுத்திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது.
இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இவ்வீட்டுத்திட்டத்தில் இம்மூன்று கட்டங்களிலும் முஸ்லிம் கிராமங்கள் திட்டமிட்ட முறையிலே பழிவாங்கப்பட்டிருப்பதை காணமுடியும். ஓவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும் குறிப்பிட்ட ஒரு சில வீடுகளை மட்டும் வழங்கி விட்டு மீதியான மக்களுக்கு வழங்குவதை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இதை நாங்கள் உரிய அலுவலரிடம் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்கின்றபோது இந்தியத் தூதுவராலயம் இன்னும் எங்களுக்கு
பணத்தை அனுப்பாத காரணத்தினால்தான் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது என சொல்லுகின்றனர். இரண்டாம் கட்டத்தில் உள்வாங்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள் சிலவற்றிலே இதுவரை வீடமைப்பு ஆரம்பிக்கப்படவே இல்லை. இதேபோல் மூன்றாம் கட்டத்திலும் உள்வாங்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள் சிலவற்றில் இதுவரை வீடமைப்பு ஆரம்பிக்கப்படவே இல்லை. உதாரணமாக இரண்டாம் கட்டத்தில் எருக்கலம்பிட்டி வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தி(530) மற்றும் பெரியமடு கிழக்கு, மேற்கு(354) மூன்றாம் கட்டத்தில் உப்புக்குளம் வடக்கு, தலைமன்னார் பியர், கூளாங்குளம், சிலாவத்துறை, புதுவெளி, பி.பி.பொற்கேணி, எஸ்.பி.பொற்கேணி, அகத்தி முறிப்பு, கொண்டச்சி போன்ற கல கிராமங்களை கூறமுடியும்.
இதேபோன்று வவுனியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் இரண்டாம் கட்டத்தில் உள்வாங்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள் சிலவற்றிலே மிகக் குறைவானவர்களுக்கே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. உதாரணமாக இரண்டாம் கட்டத்தில் பாவற்குளம், சாளம்பைக்குளம், ஆண்டியாபுளியகுளம் போன்ற பல கிராமங்களை கூறலாம்.
இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் இவ்வாறு பிரித்துச் செய்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்தியாவை பொறுத்தவரையிலே இந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்லின மக்களும் ஒற்றுமையாக இனமத பேதமின்றி வாழுகின்ற ஒரு நாடு. அவ்வாறு இருக்கின்றபோது இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் இவ்வாறு முஸ்லிம்களையும் தமிழர்களையும் வேறுபிரித்து தங்களுடைய செயற்பாட்டை முன்னெடுப்பது எங்களுக்கு மிக வேதனையாக உள்ளது.
எனவே நீங்கள் இந்த விடயம் சம்பந்தமாக உடனடியாக ஆராய்ந்து எவ்வாறு தமிழ் கிராமங்களில் இவ்விடமைப்புத் திட்டம் நடைபெறுகிறதோ அவ்வாறே சமமாக எமது முஸ்லிம் கிராமங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு மிகத் தயவாக கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட கிளைகள் இணைந்து கையெழுத்திட்டு இலங்கையிலுள்ள இந்திய தூதுகத்துக்கு கையளித்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment