Header Ads



கல்முனையில்...!!


(மருதூர் ப்ரிஆ)

கடந்த சில நாட்களாக கல்முனை நகரம் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. அடிக்கடி ஏதாவது நிகழ்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. சில நேரங்களில் கொந்தளிப்பான நிகழ்வுகளாகவும் இருக்கும். அதிலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் தான் அதிகம். அதற்கு தேர்தல் அவசியமல்ல. ஏனைய பிரதேசங்களில் தேர்தல் வருகின்ற போதுதான் நிறைய விடயங்கள் அம்பலத்துக்கு வரும். ஆனால், கல்முனைத் தொகுதி இதற்கு விதிவிலக்கு என்னவோ தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர், கல்முனை மாநகர சபையின் முதல்வர் பிரச்சினை மிகவும் சூடாக அரங்கேறியிருந்தது. இதில் யார் சரி, யார் பிழை என்ற வாதப்பிரதி வாதங்களைவிட தூண்டிவிடுபவர்கள் யார் என்பதே பலரது மூளைகளுக்கும் தீனியாக அமைந்திருந்தது. இது அவருடைய காய்நகர்த்தல், இல்லை இவருடைய காய் நகர்த்தல் என்று பலதரப்பட்ட எதிர்வு கூறல்கள். எல்லாவற்றையும் நியாயப்படுத்த ஏதாவது காரணங்களும் முன்வைக்கப்படும். நெருப்பில்லாமல் புகையாது என்பதை மென்மேலும் ஊர்ஜிதப்படுத்துவது போல.

முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சகோ. சிராஸ் மீராசாஹிபு கட்சித்தலைமையின் மீது அதிருப்தியுற்றவாறு முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்த மறுகணம், சட்டத்தரணி நிஜாமுடீன் அவர்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் சேரப் போவதாக அறிவிப்பு வந்து சேர்ந்தும் விட்டார். இந்த நிலையில் பலவிதமான ஆரூடங்கள்.

சகோ. சிராஸ் கட்சி தாவுதலுக்கு கூறுகின்ற காரணம்

அவர் சார்ந்த பிரதேசத்துக்குரிய தனியான உள்ளுராட்சி சபையை பெறுவதற்காகவே, தான் முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறுவதாகும்.  கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது இந்தக் கோசமும் முன்வைக்கப்பட்டதனால் தான் மக்கள் இவருக்கு வாக்குகளை தாராளமாக வழங்கினார்கள் என்பது உண்மை. பின்னர், தனது இரண்டு வருட காலப்பகுதியில் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதும் உண்மை. இறுதியாக தனது முதல்வர் பதவிக்கு ஆப்பு வந்த போதும் இந்தக் கோசத்தை முன்னெடுத்திருந்தாலும், மக்களின் ஆதரவு இல்லாததால் பிசு பிசுத்துப் போய் விட்டதும் உண்மை. ஆக, இந்த பிரதேச சபை என்ற விடயத்தை அரசியல்வாதிகள் தங்களது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு துரும்பாகப் பயன்படுத்துகிறார்களே தவிர, அதைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையவே கிடையாது.

எனினும் இன்றைய சூழ்நிலையில், சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் காலத்தின் கட்டாயத்தால் அதிகமாகவுள்ளது. மக்கள் எப்போதும் ஏமாளிகள் தானே. இந்தக் கோசத்தை முன்வைத்து சகோ. சிராஸ் மக்கள் முன் வருகின்ற போது, மீண்டுமொரு தடவை இவருக்கு மக்கள் தமது ஆதரவை வழங்க சந்தர்ப்பம் இருக்கின்றது. ஏனெனில் இது நெடுங்காலக் கோரிக்கை என்பதனால், மக்கள் இவர் பக்கம் சாய்ந்து விட வாய்ப்புக்கள் அதிகம். மேலும், இப்பகுதி மக்களின் கணிசமான ஆதரவைப் பெறுவதில் ஆதங்கத்தோடு இருக்கின்ற கௌரவ அமைச்சர் அதாவுல்லாவும,; சகோ. சிராஸை வைத்து காய்நகர்த்தலாம். இது முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த உள்ளுர்  அரசியல்வாதிகளுக்கு நிச்சயமாகத் தலையிடியைக் கொடுக்கும். இதனால், அன்று சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச செயலகம் வழங்குவதற்கு விரும்பியிராத முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முயற்சி செய்து  பிரதேச செயலகம் வருவது திண்ணமாகிய நிலையில், தாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று இறுதி நேரத்தில் காய் நகர்த்தியதை மக்களும் அறிவார்கள், வரலாறும் சான்று பகரும். அதுபோலவே, இன்றும் முஸ்லிம் காங்கிரஸ் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு பிரதேச சபையைத் தாங்கள் தான் பெற்றுக் கொடுத்தோம் என்று மக்களுக்கு காட்ட வேண்டியிருக்கிறது. யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்ற நிலையில் மக்களும் இருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னர், சகோ. சட்டத்தரணி நிஜாமுடீன் அவர்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். அவராகவே இணைந்து கொண்டாரா அல்லது சிலரின் தூண்டுதலினால் இணைந்து கொண்டாரா என்பது கேள்விக்குரிய விடயம். தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அண்மையில் நடாத்தியிருந்தார். அதில் அவரால் கூறப்பட்ட சில விடயங்களை அலசிப்பார்க்கலாம்.

மௌத்தாகும் வரைக்கும் இனி முஸ்லிம் காங்கிரசுடன் தான் இணைந்திருப்பேன். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். சுயநலவாத அரசியல் மேலோங்கி விட்ட இந்தக் காலப்பகுதியில், அதனை தானும் செய்திருக்கின்ற நிலையில் மக்கள் அவ்வளவு எளிதாக இதனை நம்பிவிடுவார்களா என்பது சந்தேகமே. ஒருவேளை இது சாத்தியமாகக் கூட இருக்கலாம். தனது குடும்பத்தோடு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்ற சகோ. நிஜாமுடீன் கட்சியின் நாளாந்த அரசியற் செயற்பாடுகளில் முழுமூச்சாக இறங்காமல், பெயரளவில் நானும் காங்கிரஸ்காரன் என்ற நாமத்தோடு காலத்தைக் கழிப்பதற்கும் இடமிருக்கிறது. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அரசியல் ரீதியாக அனைத்துப் பதவிகளையும் அனுபவித்து விட்டேன். நான் மாகாண சபை உறுப்பினராவதற்கோ அல்லது பாராளுமன்றத்துக்கு செல்வதற்கோ முஸ்லிம் காங்கிரஸோடு மீண்டும் இணையவில்லை. இதுவும் காலத்தின் பதிலில் தான் உண்மை தெரியவரும். எதுவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அரசியல்வாதிகள் காய் நகர்த்தமாட்டார்கள் என்பது கூட மக்களுக்குத் தெரியாதா என்ன. இருந்தபோதிலும், முஸ்லிம் காங்கிரஸின் தற்கால கல்முனை அரசியல் களநிலவரத்தைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற ஆசனத்தை சகோ. சட்டத்தரணி ஹரீசும், மாகாண சபை ஆசனத்தை சகோ. ஜெமீலும், மாநகர சபை  ஆசனங்களை சகோ. சட்டத்தரணி நிசாம் காரியப்பருட்பட்ட சிலரும் ஆக்கிரமித்திருக்க, சகோ. நிஜாமுடீன் எந்த ஆசனத்துக்காக கட்சி தாவினார் என்ற கேள்விக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஒருவேளை இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தான் அவ்வாறு சொன்னாரோ?

நான் பிரதியமைச்சராக நான்கு வருடங்கள் இருந்து செய்த அபிவிருத்திப் பணிகள் நாற்பது வருட அபிவிருத்திக்கு ஒப்பானதாகும். ஆனால் நான் செய்தவை ஒன்று கூட மக்களுக்குப் புரியவில்லை. நான்  முஸ்லிம் காங்கிரஸுடன் இருந்து அந்த அபிவிருத்திகளை செய்திருந்தால் அத்தனையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கும். தான் செய்த சேவைகளைப் பட்டியலிடாமல் வெறுமனே மொட்டையாகக் கூறியது ஒருபுறமிருக்க, மீண்டும் ஒரு பிரதியமைச்சராகி மக்களுக்குப் புரியும் வகையில் சேவை செய்ய விரும்புகிறாரோ என்னவோ. எது எப்படியிருந்தாலும் இனிப்பை நாடித்தான் எறும்புகள் மொய்க்கும் என்ற நியதியை மாற்றமுடியுமா அல்லது எறும்புகளுக்கு சக்கரை புளிக்கும் என்று புது நியதியைத் தான் உருவாக்க முடியுமா?

நான் எனது மனத்தாங்கல் காரணமாக ஒதுங்கி இருந்தேனே தவிர கட்சியை விட்டு விலகவில்லை. அப்படியென்றால் இரண்டு தோணிகளில் கால் வைத்துப் பயணித்ததனால் தான் சறுக்க வேண்டி வந்ததோ? அங்கத்துவம் இல்லாமல் தான் மாற்றுக் கட்சிகளில் களமிறங்கினாரோ, அதனால் தோற்றும் போனாரோ. இதுகூடத் தெரியாமல் தான் மாற்றுக் கட்சித் தலைவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் போலும். என்னவொரு சிறுபிள்ளைத் தனமான பேச்சு. அதனை நம்புவதற்கு மக்கள் என்ன அந்தளவுக்கு முட்டாள்களா?

இந்தக் கால கட்டத்தில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது கட்டாய தேவையாக உள்ளது. அதற்காக என்னை அர்ப்பணிக்க உள்ளேன். அப்படியென்றால், இப்போதிருப்பவர்கள் கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தானே அர்த்தப்படும். இதனை ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களும் தலைமையும் ஏற்றுக் கொள்ளுமா? மௌனமாக இருந்தாலும் சகோ. நிஜாமுடீன் கூறியது வாஸ்தவம் தான் என்றாகி விடுமல்லவா?  

இந்த நிலை தொடர்கையில், சகோ. நிஜாமுடீன் தனது குடும்பத்தோடு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகிறார். தொடரின் அடுத்த கதையை தயார்படுத்தி ஒத்திகை பார்க்க நேரம் தேவையோ என்னவோ! 

No comments

Powered by Blogger.