தேசத்துரோக வழக்கை டுபாயில் நடத்த வேண்டும் - முஷரப் மனு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப். இவர் அதிபராக பதவி வகித்தபோது கடந்த 2007–ம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்திருந்தார். அது தொடர்பாக தற்போது அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு இஸ்லாமா பாத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. ஆனால் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வருவதால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி முஷரப் ஆஜராக மறுத்து வருகிறார்.
ஆனால் அவர் வருகிற 31–ந்தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். அல்லது அவரை கைது செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.
இந்த நிலையில் முஷரப் சார்பில் அவரது வக்கீல் அப்பாஸ் நக்வி சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.
முஷரப்புக்கு கொலை மிரட்டல் உள்ளது. நாட்டில் சட்டம்–ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை பாகிஸ்தானில் தொடர்ந்து நடத்துவது சாத்தியமல்ல.
எனவே இந்த வழக்கு விசாரணையை நடுநிலையான பாரபட்சமற்றதொரு இடத்தில் நடத்த வேண்டும். அதற்கு உகந்த நாடு துபாய்தான். எனவே முஷரப் வழக்கு விசாரணையை துபாய்க்கு மாற்ற வேண்டும்.
கிரிக்கெட் போட்டிகள் பாராபட்சமற்ற நடுநிலையான துபாயில்தான் நடத்தப்படுகின்றன. அது போன்ற முஷரப் வழக்கையும் அங்கு நடத்துவதுதான் சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment