Header Ads



முதுபெரும் ஒளிப்பதிவாளர் அப்துல் கபூர் காலமானார் - ஜனாஸா நல்லடக்கத்தில் பெருமளவு மக்கள்

(சத்தார் எம் ஜாவித்)   

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் சினிமாத் துறையின் முதுபெரும் ஒளிப்பதிவாளர் கலாபூஷணம் மதார் முஹைதீன் அப்துல் கபூர் தனது 80வது வயதில் இன்று (17) காலமானார்.

எம்.ஏ. கபூர் தனது மணைவி மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த போது கடந்து மூன்று வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் இன்று அதிகாலை திஹாரியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார் அவர் 5பெண் பிள்ளைகளினதும் ஹூஸைன் கபூர் என்ற ஆண் மகனின் தந்தையுமாவார்.

வடமாகாணத்தில் மன்னாரைப் பிறப்பிடமாகாக் கொண்ட கபூரின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் என்று கூறலாம் 16 சகோதரர்களுடன் பிறந்த இவரின் குடும்பத்தில் தமிழ் இலக்கியத்தில் பிரபல்யமான மர்கூம் வித்துவான் காதர், கலைவாதிக் கலீல், மக்கள் காதர் ஆகியோர் கல்வியிலும் கலையிலும் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்கள் எனலாம்.

தமிழ் மொழியை கற்கை மொழியாகக் கொண்டாலும் சிறுவயதிலேயே திரைப்பட ஒளிப்பதிவுத் துறையில் ஆர்வம் கொண்டதனால் அவர் பல்வேறுபட்ட நினைவுச் சின்னங்களையும், சான்றிதழ்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கறுப்பு வெள்ளை சினிமாக் காலம் தொடக்கம் இன்றைய கலர் படங்கள் வரையும் சுமார் 250க்கும் மேற்பட்ட சிங்களப் படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளதுடன் சமகாலத்தில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் படங்களில் 90 வீதமான படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன் சிங்களப் படங்களில் அதிகமாக தனது திறமையைக் காட்டியமையினால் தமிழ் சினிமாத் துறையைவிட சிங்கள சினிமாத்துறையினருக்கு அதிகம் பரீட்சகமானவரும் அவர்களால் அதிகம் விரும்பப்பட்டவராகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

தாய் மொழியை விட சகோதர மொழியில் பரீட்சயமான கபூர் தனது ஒளிப்பதிவுத் துறையில் நேர்மையாகவும், கடமை தவறாது செயற்பட்டவர் என்பதுடன் ஒளிப்பதிவுத் துறையில் மிகவும் சிறந்தவராக விளங்கியதால் அவரை சினிமாத்துறை 'டே அன் நைட் கபூர்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம் எந்த நேரத்திலாவது ஒளிப்பதிவுக்கு அழைத்தால் உடன் சமுகமளிககுகம் திறன் கொண்டதனால் அவர் மேற்படி செல்லப் பெயரில் அழைக்கப்பட்டார்.

2000ஆம் ஆண்டில் இவர் ஒளிப்பதிவு செய்த 'கினிகத் மது சமய' என்ற திரைப்படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தமை முக்கிய அம்சமாகும். மேலும் இவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான இணைப்படங்கள் தயாரிப்பிலும் ஒளிப்பதிவாளராக செயற்பட்டமை அவரின் ஒளிப்பதிவுத் திறமைக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும்.

இவ்வாறு நாட்டிற்கு சினிமாத் துறையில் சிறந்து விளங்கிய இவருக்கு அவரின் இறுதிக் காலத்தில் அத்துறை கைவிட்டு விட்டமை கவலைக்குரிய விடயமாகும். காரணம் அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் தனது நோய்க்கு செலவிடுவதற்கு நிதி இல்லாது கஷ்ட நிலையை எதிர் கொண்டமையேயாகும்.

வராற்றில் பல சாதனைகளை சாதித்த கபூரின் வபாத்தைக் கேள்வியுற்ற கலைத்துறையினர், ஊடகத்துறையினர், புத்தி ஜீவிகள், கல்விமான்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களும் அவரது ஜனாஸாவிற்கு மரியாதை செலுத்தியதுடன் திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ளா ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்ற ஜனாஸா நல்லடக்கத்திலும் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேற்படிக் கலைஞனின் மறைவைக் கேட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திருமதி கபூர் மற்றும் அவரது புதல்விகளுடன் தொலைபேசியில் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளமை கலைத்துறையில் அவரின் மறைவிற்குப் பிறகு அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கிடைத்த மற்றுமொரு கௌரவமாகும்.



No comments

Powered by Blogger.