நகைக்கடை உரிமையாளர் காருடன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்
நகைக்கடை உரிமையாளர் ஒருவரை அவர் பயணித்துக்கொண்டிருந்த காருடனேயே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று காரையும் பணத்தையும் கொள்ளையிட்டுவிட்டு காட்டில் இறக்கிவிட்ட சம்பவமொன்று வாகரை, புல்லாவி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளர் உட்பட இருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை வாகரை, புல்லாவி பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத இரு சந்தேகநபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
வாகரை, காயங்கேணி பாலத்திற்கு அருகில் மலசலம் கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பற்றைக்கு சென்றபோதே அங்கு வந்த சந்தேகநபர்கள் இருவரும் இவர்கள் இருவருக்கும் துப்பாக்கியை காட்;டி அச்சுறுத்தியுள்ளதுடன் இருவரின் கைகளை பின்புறமாக கயிற்றால்கட்டி காருடன் புல்லாவி பிரதேச காட்டிற்குள் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட கார் காட்டின் உட்பகுதிக்குச் சென்றதும் அங்கு வேறு நான்குபேர் கடத்தல்காரருடன் இணைந்துள்ளனர்.
பின்னர் கடத்தி செல்லப்பட்டவர்களை அங்குகைகளைக் கட்டியவாறு தங்கவைத்து இன்று திங்கட்கிழமை காலை நகைக்கடை உரிமையாளரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கைதொலைபேசி என்பற்றுடன் காரையும் கொள்ளையிட்டுவிட்டு இருவரையும் காட்டில் விட்டுச்சென்றுள்ளனர்.
இது தொடர்பில் நகைக்கடை உரிமையாளரால் 119 பொலிஸ் அவசர சேவைக்கு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கடத்தப்பட்ட காரை, வாகரை கஜயுவத்தை கடற்படைமுகாமிற்கு அருகாமையில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Tm

Post a Comment