தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் அவலம்..!
(சத்தார் எம்.ஜாவித்)
கொழும்பு வாழ் முஸ்லிம்களின் கல்வியின் பின்னடைவுக்கு தனவந்தர்களும் ஒரு காரணமாகும் ஏனெனில் அவர்கள் தமது உதவிக்காக ஒரு சில பாடசாலைகளையே தெரிவு செய்கின்றனர். ஆனால் அரை நூற்றாண்டைத் தாண்டிய பல முஸ்லிம் பாடசாலைகள் என்று தொடங்கியதோ அதேயமைப்பில் இன்றும் இருந்து வருவதை காணக் கூடியதாகவுள்ளது.
மானிட வாழ்விற்கு கல்வியே இன்றியமையாதது அது இல்லாவிட்டால் அங்கு மனித நேயமோ அல்லது மனித விழுமியங்களையோ அல்லது சிறந்த ஒழுக்கமுள்ள சமதாயத்தையோ காணமுடியாது. இன்றைய நவீன யுகத்தின் முன்னேற்றம் கல்வியினால் வந்ததேயாகும்.
இந்த வகையில் கல்வியின் வளர்ச்சிக்கு சகலரும் ஒத்தழைப்பு வழங்க வேண்டியது இன்றிமையாதது. ஆனால் இன்று அந்த விடயத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் பின்நோக்கியே உள்ளனர். காரணம் கொழும்பு மாவட்டத்தில் பல பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாகவும், பல்வேறுபட்ட வளப் பற்றாக் குறைகளுடன் இன்னும் முன்னேற்றம் அடைய முடியாது காணப்படுகின்றன. இவற்றை கொடை வல்லல்கள் என்று கூறுபவர்கள் கண்டு கொள்வதில்லை.
மேற்படிப் பாடசாலைகளை இனங்கண்டு அவற்றிகு உதவ வேண்டியது முஸ்லிம் தனவந்தர்களின் கடமையாகும். ஆனால் பல தனவந்தர்களுக்கு பிரபல்யம் மிக்க பாடசாலைகளே கண்முன் உள்ளது. இவ்விடயம் வேதனைக்குரிய விடயமாகும்.
நாம் ஏற்கெனவே பல பாடசலைகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளோம். அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் மற்றுமொரு பாடசாலையின் அவளநிலை இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் தெஹிவலை மூர்வீதியில் உள்ள பாடசாலையே மீலாத் முஸ்லிம் வித்தியாலயமாகும் இது ஒரே கூரையில் முதலாம் ஆண்டு தொடக்கம் 11ஆம் ஆண்டு வரை வகுப்புக்கள் காணப்படுகின்றன இதனால் மாணவர்கள் கற்பதில் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
மேற்படிப் பாடசாலையின் தற்போதைய அதிபராக அதிபர் தரம் ஒன்றினைச் சேர்ந்த திருமதி சுல்பியா மர்சூக் முஹமட் 12 ஆசிரியர்களுடனும் குறைந்த தொகையுடைய மாணவர்களுடனும் பல வளப்பற்றாக் குறையுகளுடன் மேற்படிப் பாடசாலையின் கல்வி நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கின்ற துர்ப்பாக்கிய நிலையில் இப்பாடசாலை உள்ளது.
ஆரம்ப காலத்தில் வை.எம்.எம்.ஏயின் மூலம் வறிய மாணவர்களுக்கு ஆல்குர்ஆன் போதிக்கும் ஒரு மத்ரஸாவாக ஓலைக் குடிசையில் இயங்கி வந்ததாகவும் அப்பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கை;காக அது வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் அக்காலத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கு அப்பகுதியில் ஒரு முஸ்லிம் பாடசாலை இல்லாத காரணத்தாலும் ஏனைய சிங்களப் பாடசாலைகளில் மாணவர்களின் அனுமதி மறுக்கப்படதை உணர்ந்த அக்கால முஸ்லிம் நலன் விரும்பிகள் மேற்படி இடத்தில் ஒரு பாடசாலையை அமைப்பதற்கான முயற்சிகளை மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் அக்காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யு. தகநாயக்க மற்றும் சேர் ராஷீக் பரீட் உள்ளிட்ட புத்தி ஜீவிகளின் அனுமதியுடனும், முயற்சியுடனும் 1959 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் திகதி சுமார் இருபது பேர்ச்சுக்கும் குறைவான காணியில் ஒரு மண்டபத்தை அமைத்து பாடசாலையின் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட மேற்படிப் பாடசாலையில் அக்காலத்தில் சுமார் 250 தொடக்கம் 300 மாணவர்கள் வரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டபோது அதன் அதிபராக எஸ்.ஐ. அப்துல் அஸீஸ் கடமையாற்றியுள்ளார்.
இவ்வாறு ஒரே கூரையில் க.பொ.த.சாதாரண தரம் வரையான வகுப்புக்களைக் கொண்ட மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் அரை நூற்றாண்டு தாண்டியும் இன்றுவரை தனியான வகுப்பறை இன்மை, விஞ்ஞான ஆய்வு கூடம் இன்மை, நூலகம் இன்மை, கனணிக் கூடம் என்பனவும் போதியளவு மலசலகூட வசதிகள் இன்மை, விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள் என பல தேவைகள் இன்றி மாணவர்கள் ஒரே கூரையில் அமைந்த கட்டிடத்தில் மேற்படிப் பாடசலை இயங்குவதால் தற்போது மாணவர்களின் தொகையும் குறைவடைந்து வருவதாக அதிபர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு பல தேவைகளுடன் தலைநகரில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரசு வழங்கும் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளுடன் இப்பாடசாலையை கொண்டு நடத்த வேண்டிய தர்ம சங்கடமான நிலையில் இருப்பதாகவும் மேற்படிப் பாடசாலை முஸ்லிம் தனவந்தர்களின் கண்களிலோ அல்லது முஸ்லிம் அரசியல் வாதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்களிலோ படாதிருப்பது வியக்க வைக்கம் சம்பவமாகும்.
காரணம் அரசியல் வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக கண்ணில்படுவது மக்களே ஆனால் கல்வி கண்ணில் படாது இருப்பது வேதனையிலும் வேதனை அல்லவா?.
இவ்வாறானதொரு பாடசாலையின் அவள நிலையைக் கண்டு அதனை வெளிக் கொண்டு வருவதற்கு கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் என்றால் அது மிகையாகாது.
கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் தனது செயற்றிட்டங்களில் கல்விக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மேற்படிப் பாடசாலையை அறிந்து அங்கு சென்று பார்த்தபோது இப்பாடசாலைக்கு உதவும் நோக்கில் அதிபரின் அனுமதியுடன் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு அப்பாடசாலையில் கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தினால் சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்டது.
கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.அஸ்லம் மற்றும் சங்க உறுப்பினர்களினதும் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் திருமதி சுல்பியா மர்சூக் முஹமட் தலைமையில் இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ரத்மலானை பிரதேச செயலாளர் ஹேமசிறி பியதிலக்கவும் கௌரவ அதிதியாக தெஹிளை பொலிஸ் நிலைய பிரதி பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தினால் பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்களும் குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதிகளும் வழங்க்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அதிபர் கருத்த தெரிவிக்கையில் எமது பாடசாலையில் தான் அறிந்த வரையில் இவ்வாறாதொரு சுதந்திர தின நிகழ்வு இப்பாடசாலையில் முதல் முதலாக நடைபெறுகின்றது என்றும் இதுவரை இவ்வாறான பெரிய நிகழ்வுகள் நடை பெற்றதில்லை என்றும் இதனையிட்டு தான் கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கம் நன்றியைத் தெரிவிப்பதுடன் முதல் முதலாக இப்பாடசாலையின் இந்த வைபவத்திற்கு வருகை தந்த ரத்மலானை பிரதேச செயலாளர் ஹேமசிறி பியதிலக்க உட்பட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்த அவர் இப்பாடசாலையின் வளப்பற்றாக் குறையால் இப்பகுதி மாணவர்களின் திறமைகள் மற்றும் முயற்சிகள் குறைவடைந்து செல்வதாகவும் மிகவும் கஸ்டப் பாடசாலையான இப்பாடசாலையின் அபிவிருத்தியில் அனைவரும் உதவி செய்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைளுக்காக உதவ முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இப்பாடசாலையில் முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதாகவும், ஏனைய பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்படுபவர்களும் இப்பாடசாலையில் சேர்வதாகவும், இப்பாடசலையின் வளப்பற்றாக் குறை காரணமாக வசதி படைத்த மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்குச் செல்வதாகவும் இதனால் மாணவர்களின் தொகை குறைந்து செல்வதாகவும் இவ்வாறு செல்லுமானால் இப்பாடசாலையை எதிர் காலத்தில் மூடவேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
எனவே தனவந்தர்கள் இப்பாடசலைக்கு இருக்கும் கட்டிடத்தில் மேல்மாடி ஒன்றையாவது நிறுவி மாணவர்களின் இட வசதியை மேம்படுத்தி மேற்படிப்பாடசாலையில் இருந்து மாணவர்கள் விலகிச் செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உதவுமாறு வேண்டுகோல் ஒன்றையும் விடுத்தார்.
கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறு பல பாடசாலைகள் பல்வேறுபட்ட வளப் பற்றாக் குறைபாடுகளுடன் காணப்படுவதால் அப்பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மிகவும் குறைவான அடைவ மட்டத்திலேயே செல்கின்றன.
வளப் பற்றாக்குறைகள் காரணமாக மாணவர்கள் குறித்த பாடசாலைகளில் இருந்து விலகவும், அவர்கள் நிரந்தரமாக கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகவும் வழிவகுக்கின்றன. இந்த நிலைமைகளுக்கு காரணம் எமது சமுகம் கல்வியில் அக்கறையில்லை என்பதனையே வெளிப்படுத்தகின்றன.
இவ்வாறு அலசி ஆராயும்போது கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் கல்வி நடவடிக்கைகளின் வீழ்;ச்சிப் போக்கிற்கு பணம் படைத்த முஸ்லிம் தனவந்தர்களும், முஸ்லிம்களின் பிரதி நிதிகள் என்று தேர்தல் காலங்களில் கூச்சல் இடும் அரசியல் நபர்களுமே.
இன்று பல தனவந்தர்கள் அரசியல் வாதிகளின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்கள் சொல்லும் பாடசாலைகளுக்கு தேவைகள் இருந்ததோ இல்லையோ மாறிமாறி அங்குதான் தமது பணத்தை அள்ளிக் கொட்டுகின்றனர். இவ்வாறு அள்ளிக் கொட்டுபவர்கள் அப்பாடசாலைகள் மூலம் பாராட்டைப் பெற்றாலும் ஒன்றுமே இல்லாமல் ஏங்கித் தவிக்கும் பாடசாலைச் சமுகத்தால் வேறு கண்யோட்டத்தில் நோக்கப்பட்டு வெறுப்படையும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது என்பதனையும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரே மாவட்டத்தில் ஒரே சமுகத்திற்குள்; ஏன் இந்தப் பிரிவினை கல்வி என்பது ளஅனைவருக்கும் பாடத்திட்டம் ஒன்றுதான் இல்லாத பாடசாலைகளை விட்டுவிட்டு ஓரளவு உள்ள பாடசாலைகளுக்கு வழங்கும்போது தனவந்தர்கள் சற்று இறைவனையும், வளப்பற்றாக் குறைகளுடைய சிறிய பாடசாலைகளையும் இனியாவது ஒரு கணம் சிந்திப்பதை விட்டுவிட்டு ஊடகங்களில் வந்து புகழை அடைவதால் இறைவனிடத்தில் வீண் விரயத்திற்கு நிச்சயம் தண்டனையும் உண்டு என்பதே இஸ்லாத்தின் அடிப்படை.
இஸ்லாம் எள்ளானாலும் ஏழாய் பிரித்துக் கொடு என்பதற்கு ஒப்பாக கல்விக்கு உதவும் தனவந்தர்களே, அரசியல் பிரமுகர்களே இல்லாத பாடசாலைகளையும் இனங் கண்டு உங்கள் நன்கொடைகள் மூலம் அப்பாடசாலைகள் அபிவிருத்தி அடைந்து முஸ்லிம் சமுகம் கல்வியில் வெற்றி பெற வழி செய்யுங்கள்.

Post a Comment