முஸ்லிம் இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன - நரேந்திர மோடி
'எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என, விரும்புகின்றன. ஆனால், பா.ஜ., மட்டும் தான், மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி கூறினார்.
குஜராத்தின், ஆமதாபாத் நகரில், முஸ்லிம் தொழில் துறையினர் ஏற்பாடு செய்துள்ள, மூன்று நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, முதல்வர், நரேந்திர மோடி நேற்று, துவக்கி வைத்து, மேலும் பேசியதாவது:ஆரோக்கியமான சமுதாயத்தை படைப்பதே, எங்கள் லட்சியம். அனைத்து சமுதாயங்களும் இணைந்த, சம உரிமை கொண்ட சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், எங்கள் குறிக்கோள். எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை, நாங்கள் பார்ப்பதில்லை. அனைத்து சமுதாயங்களுக்கும் பாதுகாப்பு, சம உரிமை, முன்னேற்றம், செயல்பாடு ஆகிய, இந்த நான்கு அம்சங்கள் தான், குஜராத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றன.
முஸ்லிம் இளைஞர்களிடம், ஏராளமான திறமைகள் உள்ளன. தொழில் மற்றும் வர்த்தகத்தில், முஸ்லிம் பெண்களும் ஈடுபட வேண்டும்; மாநிலத்தை முன்னேற்ற வேண்டும். வேலை தேடுபவர்களாக இருப்பதற்குப் பதில், வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். எந்தத் துறையில், முஸ்லிம் இளைஞர்களுக்கு திறமை இருக்கிறதோ, அதில் அவர்களை முன்னேற்ற தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பட்டம் தயாரித்தல், ஜவுளி போன்ற துறைகளில், முஸ்லிம்கள் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.மேலும், குறைந்த விலையில் வீடுகள் கட்டும் திட்டத்தில், அதிக அளவில் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு, மோடி பேசினார்.
இந்த கண்காட்சியில், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கைவினைப் பொருட்கள் என, பல துறைகளின் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Post a Comment