Header Ads



ஓய்வூதியத் திணைக்களத்தில் ஊழல் மோசடியா..?

ஓய்வூதியத் திணைக்களத்தில் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்படும் ஊழல் மோசடிகள் நிரூபிக்கப்படுமாயின் அதனுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன Tn க்குத் தெரிவித்தார்.

விதவைகள் மற்றும் அநாதைகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் அங்கு கடமை செய்யும் உத்தியோகத்தர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஹெட்டியாரச்சி பகிரங்கமாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

திணைக்களத்தில் சில அதிகாரிகள் போலி கையொப்பங்களையிட்டு ஓய்வூதியப் பணத்தில் மோசடிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து நிலைமைகளை ஓய்வூதியத் திணைக்களத்துக்கு நேரில் சென்று ஆராய்ந்த அமைச்சர் செனவிரட்ன, விரிவாக ஆராயும் பொருட்டு இரு தரப்புடனும் விசேட சந்திப்பொன்றினை எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய் க்கிழமை ஓய்வூதியத் திணைக்களத்தில் நடத்தவுள்ளார்.

ஏற்கனவே இதே குற்றச்சாட்டின் பேரில் அடையாளம் காணப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்ட சிலரே சங்கலித் தொடராக ஓய்வூதியப் பணத்தில் மோசடிகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

தனது ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வந்த ஒரு நபரிடம் குறித்த அதிகாரிகள் சுமார் ஒரு இலட்சம் ரூபா வரையில் இலஞ்சம் கோரியுள்ளனர். இதனால் கோபமடைந்த நபர் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்தும் முகமாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரொஹான் பெரேரா தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய அமைச்சரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தும் பணிப்பாளர் நாயகத்தினை இடம்மாற்றக் கோரி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உண்மை நிலவரம் குறித்து பொலிஸ் மோசடிகள் பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறிய அமைச்சர் அரசாங்கத்தின் பணத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியெனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.