Header Ads



இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியதில்லை - பஷீர் சேகுதாவூத்

இலங்கையில் உள்ள எந்தவொரு சமூகமும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மார்க்கம் இலங்கையிலேயே உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் உற்பத்தி வள ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போர்வையிலான சர்வதேச வியூகம் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மத ரீதியிலான அசெளகரியங்களை முன்னிலைப்படுத்தி, இலங்கை அரசிற்கு சர்வதேச அரங்கில் அபகீர்த்தி ஏற்படுத்துவதை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், இலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள், இலங்கை முஸ்லிம்கள் குறித்து ஆர்வமும் அக்கறையும் காட்டினாலும் அவர்களின் பெரும்பாலானோர் தங்களது நாடுகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாகக் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் முஸ்லிம்கள்  பங்குபற்றாவிடினும், அவர்கள் பாரியளவில் அவலங்களையும், உயிரிழப்புக்களையும், உடைமைகளையும் இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய பாதிப்புக்கள் பற்றி அன்று அக்கறை கொள்ளாத சக்திகள், அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கின்ற மத அசெளகரியங்களைப் பயன்படுத்தி, இலங்கை முஸ்லிம் சமுதாயத்தையும் இராஜதந்திரப் போரில் ஓரங்கமாக இழுத்துவிட முயற்சிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் கடந்த காலங்களில் தங்களுக்கான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக உலகின் முஸ்லிம் நாடுகளை நாடியிருக்கவுமில்லை.சர்வதேச சமூகத்தை வேண்டி நிற்கவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த சக்திகளால் முஸ்லிம்களுக்கு அண்மைக்காலமாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் உள்நாட்டு மட்டத்தில் பேசித் தீர்ப்பதற்கே முஸ்லிம் சமூகம் முயற்சிகளை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாள் பசீர் சேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கிய போது உள்நாட்டு மட்டத்திலேயே பேசித் தீர்வுகள் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, இன்றைய காலகட்டத்திலும் இலங்கை முஸ்லிம்களை சர்வதேச அரங்கிற்குள் இழுத்தெடுத்து அரசியல் இராஜதந்திர வேட்டைகளில் பலியிடுவதை விரும்பவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஜனநாயக நடைமுறைகளிலும், சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையிலும், மதவாதமும், இனவாதமும் அற்ற பெரும்பான்மையான அரசியல் தலைமைத்துவங்களிலும் இலங்கை முஸ்லிம்கள் இன்னும் நம்பிக்கை இழந்துவிடவில்லையெனவும் பஷீர் சேகுதாவூத் கூறியுள்ளார்.

அத்துடன், நாடெங்கும் சிதறி வாழும் முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வன்முறை அரசியல் உத்திகளை கடைப்பிடிக்கவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சரியான கருத்து கடந்த காலங்களில் விடுதலைப் பலிகல் அப்பாவி முஸ்லீம்களை அனியாயமாகக் கொன்று குவித்தபோது குரல் கொடுக்க இலங்கை அரசல்லாது இன சார்பாகவோ சர்வதேச சார்பாகவோ யாரும் வரவில்லை.
    இருப்பினும் முஸ்லீம் அரசியல்வாதிகளும் கண்டும் காணாது நடந்ததன் காரணம் புரியவில்லை. எது எப்படியோ பஷீர் அர்கள் சொல்லும் கருத்து நூறுவீதம் நியாயமானது.

    ReplyDelete

Powered by Blogger.