Header Ads



தேர்தல் பிரச்சாரம் செய்ய விடுகிறார்கள் இல்லை - சரத் பொன்சேக்கா கவலை

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தடை ஏற்படுத்தப்படுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் உரிமை தமது கட்சிக்கு மறுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களை நடாத்த இடங்களை பெற்றுக் கொள்வதற்கு தடை ஏற்படுத்தப்படுவதுடன், பிரச்சாரங் கூட்டங்களின் போது பாதுகாப்பு தரப்பினர் பல்வேறு வழிகளில் தடைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணசபையில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களினால் சுதந்திரமாக பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரம் நடாத்துவதற்காக மைதானங்கள் அல்லது வேறும் இடங்களை ஒதுக்கீடு செய்ய முயற்சி செய்யும் போது உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அதனை தடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சில தனிப்பட்ட இடங்களைக் கூட பெற்றுக்கொள்ள முடிவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு சகலருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் தினத்தை அறிவிப்பதும், வாக்குச் சீட்டுக்களை அடிச்சடிப்பதும் மூலம் தேர்தல் நீதியானதாக நடைபெற்று விடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் சம சந்தர்ப்பத்தை வழங்க தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையாளருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தினை உரிய முறையில் நடாத்த சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் சர்வதேச சமூகத்தின் மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயக சீர் குறித்த குற்றச்சாட்டுக்கள் மெய் என்றே அர்த்தப்படும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.