Header Ads



நல்லாட்சி தொடர்பில் எமக்கு எவரும் சொல்லித்தரத் தேவையில்லை - கோட்டா

(ஸாதிக் ஷிஹான்)

நல்லாட்சி ஏற்படுத்துவதற்கான உதவிகளையோ அல்லது வழிகாட்டல்களையோ இலங்கை எந்த ஒரு நாட்டிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், பொது மக்களின் உச்சகட்ட நலன்புரி வசதிகளை கருத்திற்கொண்டு நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

குளியாப்பிட்டியில் மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை பார்வையிட நேற்று வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கண்காட்சி வளாகத்தில் பொலிஸ் காட்சிக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கைவிரல் ரேகை அடையாள வலையமைப்பை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்தமல்லவராச்சி, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-

எமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துள்ள பாரிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் பார்க்க வேண்டும். இன்று (நேற்று) ஆரம்பிக்கப்பட்ட தானியங்கி கைவிரல் ரேகை அடையாள வலையமைப்பு திட்டத்தை மக்களுக்காக அறிமுகப்படுத்தியமை நல்லாட்சியை வலுப்படுத்துவதற்கான பாரிய வேலைத்திட்டத்தின் ஒன்றாகும். 

இந்தத் திட்டத்தை நடை முறைப் படுத்துவதன் மூலம் மக்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுவதுடன், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிட மிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. இது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நல்லாட்சியை ஏற்படுத்த உதவியாக அமைகிறது. 

இந்தப் புதிய வேலைத்திட்டம், வலையமைப்பின் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை மிகவும் இலகுவாக அடையாளங் காண முடிகிறது. இதன் மூலம் சட்டத்தையும் , ஒழுங்கையும் உடனடியாக அமுல்படுத்த முடியும் என்றார். பொலிஸ் அதிகாரிகளினதும், எமது நாட்டிலுள்ள கணனி நிபுணர்களினதும், அர்ப்பணிப்பான சேவைகளின் ஊடாக உருவான ‘தானியங்கி கைவிரல் ரேகை அடையாள வலையமைப்பை’ எமது நாட்டின் தயாரிப்பு என்பதை பெருமையுடன் கூற முடியும்.

அர்ப்பணிப்பு மூலம் சகலவற்றையும் சாதிக்க முடியும். சர்வதேச படையினரை, பொலிஸாரை விட எமது பொலிஸ் அதிகாரிகளிடமும், புத்தி ஜீவிகளிடமும் சுயமான திறமை உள்ளது என்பதை இது உறுதிப்படுத்திக் காண்பிக்கிறது. எனவே, சகல விடயங்களுக்கும் நாங்கள் வெளிநாடுகளிடம் சென்று கையை நீட்டி கேட்கத் தேவையில்லை. இந்த தகவலை உலகிற்குச் சொல்லும் பொறுப்பு ஊடகத்தைச் சார்ந்தது. நல்லாட்சி செய்யும் திறமை எமக்கு உள்ளது. எனவே நல்லாட்சி தொடர்பில் எமக்கு எவரும் சொல்லித்தரத் தேவையில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.