Header Ads



ஜனாதிபதியின் செலவுகளை கேட்ட எதிர்க்கட்சி, மறுத்த ஆளும்கட்சி - பாராளுமன்றத்தில் சர்ச்சை

(Vi)  2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு விஜயங்கள், அதன் செலவு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட முடியாது என்று பாராளுமன்றத்தில் அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்ததால் சபையில் சர்ச்சை நிலையும் வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்டன. 

ஐக்கிய தேசியக் கட்சியின் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.யினால் கேட்கப்பட்டிருந்த ஜனாதிபதி தொடர்பான கேள்விகளுக்கு பதில் வழங்க முடியாது என ஆளும் கட்சியின் சார்பில் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ்குணவர்தன  கூறிய அதேவேளை, அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் குரல் கொடுத்தார். 

இதேவேளை, அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ரவிகருணாநாயக்க, ஜனநாயக தேசிய கூட்டணியின் அனுர குமார திசாநாயக்க, ஐ.தே.க. வின் அஜித் பெரேரா ஆகிய எம்.பி.க்கள் எதிர்வாதங்களை முன்வைத்தனர். 

முன்னதாக கேள்வி எழுப்பியிருந்த ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க  

2005 முதல் இன்று வரையில் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் எண்ணிக்கை, விஜயங்கள், மேற்கொள்ளப்பட்ட நாடுகள், இதன்போது ஏற்பட்ட மொத்த செலவினத்தொகை, ஐனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களின் அவரோடு இணைந்து சென்றோரின் எண்ணிக்கை, இந்த சந்தர்ப்பங்களின்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள், இவற்றால் கிடைத்துள்ள, கிடைத்துக்கொண்டிருக்கின்ற, கிடைக்கப்பெறவிருக்கின்ற நன்மை ஆகிய விடயங்கள் தொடர்பில் கேட்டிருந்தார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் இரண்டாம் சுற்றுவேளையில் மேற்படி கேள்வியை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க எம்.பி. கேட்டார். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்படி கேள்வியானது ஜனாதிபதியின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் குறித்து கேட்கப்பட்டிருப்பதால் இது தொடர்பில் அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியாது. பதில் வழங்கமாட்டோம் என்று கூறினார்.

ஒழுங்குப்பிரச்சினை 

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் ரவிகருணாநாயக்க எம்.பி.

ஜனாதிபதியுடன் தொடர்புடைய விடயங்களை பற்றி இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பதில்களும் வழங்கப்பட்டுள்ளன. நானே பல கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். பதில்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இப்படி இருக்கும்போது இன்று எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க மறுப்பது ஏன்? எனக் கேட்டார்? 

ரணில் 
இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 42 ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதியானவர் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவராக இருக்கின்றார். 

இது ஒரு புறமிருக்க இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகளைப் பொறுத்த வரையில் அவை ஜனாதிபதியின் நடத்தை குறித்து கேட்கப்பட்டிருக்கவில்லை. 

மாறாக 2005 முதல் ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் செலவீனம் உள்ளிட்டதான கேள்விகளே ஆகும். எனவே இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது எனக் கூறினார். 

அனுரகுமார 
இதன்போது எழுந்த ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான அனுர குமார திஸாநாயக்க எம்.பி கூறுகையில்,

ஜனாதிபதி தொடர்புடைய மேற்படி கேள்வியானது இன்று மூன்றாவது தடவையாக கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த சபையில் கேட்கப்பட்ட இந்த கேள்வி தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் கோரிய ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று திடீரென பதிலளிக்க முடியாதென்று கூறுகின்றார் எனச் சுட்டிக்காட்டினார். 

தினேஷ் 
இதன் பின்னர் எழுந்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,

ஜனாதிபதியின் நடத்தை மற்றும் அவரது செலவீனம் தொடர்பில்  கேள்வியெழுப்புவதற்கும்  முறைமையொன்று உள்ளது. எனினும் அவரது செலவீனம் தொடர்பில் பதிலளிப்பது அரசாங்கத்தின் விருப்பமாகும். பதிலளிக்காமலும் இருக்க முடியும் என்றார்.

அஸ்வர் 

இதன்போது எழுந்த ஆளும் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் எதிர்கட்சித் தலைவர் முன்வைக்கும் தர்க்கம் ஏற்கக்கூடியதல்ல.

இத்தகைய கேள்விக்குப் பதிலளிப்பது, பதிலளிக்காது விடுவது என்பது அமைச்சரைப் பொருத்ததாகும்.

நான் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின் போது அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னவிடம் அன்றைய எதிர்க் கட்சியினால் எழுப்பப்பட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிப்பதை தவிர்த்துக்கொண்டார் எனக் கூறினார்.

ரணில்

இதன்போது மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாம் இங்கு அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும். ஜனாதிபதி தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதோ அல்லது தவிர்ப்பதோ அமைச்சரின் அல்லது அரசாங்கத்தின் விருப்பமாக இருக்கலாம். எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவராக இருக்கின்றார் என்றார்.

 அஜித் பி. பெரேரா

இதனையடுத்து எழுந்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான அஜித் பி.பெரேரா கூறுகையில்:-  இங்கு சுட்டிக்காட்டப்படுகின்ற நிலையியற் கட்டளைகள் பிரிவின் அடிப்படையில் ஜனாதிபதி தொடர்புடைய சில விடயங்களுக்கு இணங்க முடியும். எனினும் ஜனாதிபதியானவருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதே பாராளுமன்றம் தான்.

அவரது நடவடிக்கை தொடர்பான  அலுவலகமும் இங்கு இயங்குகின்றது. எனவே அவர் தொடர்பில் கேள்வி எழுப்ப முடியும் எனக்  கூறினார்.

சபாநாயகர்

அனைவரது வாதங்களையும் கருத்துக்களையும் அவதானித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, விவாதங்கள் மற்றும் இங்கு தொடுக்கப்பட்டிருக்கின்ற கேள்விகள் ஆகியவற்றை நோக்குகையில் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்கள் - செலவினங்கள் தொடர்பிலேயே கேட்கப்பட்டுள்ளன. எனவே இவற்றுக்குப் பதிலளிப்பதில் தவறில்லை.

இதேகேள்வியை பிறிதொரு தினத்தில் கேட்க முடியும் எனக் கூறி சர்ச்சையை முடிவுக்குக்  கொண்டு வந்தார்.

1 comment:

  1. அஸ்வரும், ரணிலும் காகித பொம்மைகள் பாவம் அவர்களுக்கென்று ஒன்றும் இல்லையே....

    ReplyDelete

Powered by Blogger.