வெளிநாட்டுத் தலையீடு இனங்களுக்கிடையில் துருவப்படுத்தலை விரிசலாக்கும் - ரவூப் ஹக்கீம்
நாட்டின் பிரதான முஸ்லிம் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையில், இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சகல சமூகத்தவரையும் ஒன்றிணைப்பதற்கு தமது கட்சி பாடுபடுவதாக கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய, பசுபிக் பிராந்திய தலைவி மெரி யமஷிட்டாவிடம் தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டுத் தலையீடு இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை விரிசலாக்குவதோடு, நிலைமையை மேலும் மோசமடையச் செய்யலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதியமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் ஹக்கீம், நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புகள் பற்றியும், நீதியை அடைவதற்கான வழிவகைகள் பற்றியும் மெரி யமஷிட்டாவிடம் விளக்கிக் கூறியதோடு, வடகிழக்கு மாகாணங்களில் நிலவும் காணி பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளை காண்பதை நோக்கமாகக் கொண்டு, நீதிமன்றங்களுக்குப் புறம்பாக பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வு காண்பதற்கு விஷேட மத்தியஸ்த சபையை தமது அமைச்சு அமைக்கவுள்ளதாகவும் கூறினார்.
தேசிய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித் திட்டத்துக்கு தமது அமைச்சினூடாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் வழங்கிவரும் நிதியுதவிகளுக்காக அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
மெரி யமஷிட்டா அவர்கள், தமது அமைப்பு பொதுவாக இலங்கை அரசாங்கத்திற்கும், குறிப்பாக நீதியமைச்சிக்கும், தொடர்ந்து உதவுமென அமைச்சரிடம் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் இலங்கையிலுள்ள ஐ.நா. நல்லிணக்க, அபிவிருத்தி ஆலோசகர் கீட்டா சப்ஹர்வால், ஐ.நா. அரசியல் விவகார அதிகாரி ஷியுகி கொசூகா, நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டீ சில்வா, அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் பங்குபற்றினர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடக செயலாளர்.


Post a Comment