Header Ads



ஒலுவில் துறைமுகத்திற்கு எப்போது கப்பல் செல்லும்..!


இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை மாவட்டம் ஓலுவில் துறைமுகம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகின்ற போதிலும் அங்கு இதுவரை வர்த்தகக் கப்பல் போக்குவரத்து எதுவும் நடைபெறாமல் உள்ளது குறித்து பிரதேச மக்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.
துறைமுகத்தில் எந்தவொரு கப்பலும் இதுவரை நங்கூரப்படாத நிலையில், கப்பலை காணாத துறைமுகமாக தமது பிரதேசத்திலுள்ள துறைமுகம் விளங்குவதாக உள்ளுர் மக்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

மறைந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் சந்திரிகா குமாரணதுங்கவின் பதவிக் காலத்தில் துறைமுக அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தக துறைமுகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

டென்மார்க் அரசாங்கத்தினால் 10 வருட கடன் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட துறைமுக வேலைகள் முடிவடைந்த நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவினால் வர்த்தக மற்றும் மீன்பிடித்துறை முகங்களை உள்ளக்கிய ஒலுவில் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது;.

மீன்பிடித் துறைமுகத்தை பொறுத்தவரை, மீன்பிடி படகுகள் அதில் நங்கூரமிடுவதால் அது சுறுசுறுப்புடன் இயங்குகிறது. ஆனால் வர்த்தக துறைமுகத்தை பொறுத்தவரை, துறைமுகப் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், அங்கு இராணுவம் மற்றும் கடற்படையினரே தற்போது காணப்படுவதாக பிபிசி நிருபரிடம் உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

தென்கிழக்கு மக்களின் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக அமையும் என்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த தங்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளதாகவும் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.