கிழக்கு மாகாணத்தில் ஆரம்பக்கல்விச் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட செயற்றிட்டம்
(அனாசமி)
கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் கடமையாற்றுகின்ற ஆரம்பப்பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் சேவைக்கால ஆலோசகர்களுக்கான இரண்டுநாள் செயலமர்வு திருகோணமலை துளசிபுறத்தில் அமைந்துள்ள மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தின் ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு. பீ. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பயிற்சிச் செயலமர்வுகளில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.ரீ. நிஸாம் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த வருடம் ஆரம்பக்கல்வி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விடயங்கள், இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் போன்றனவும் ஆராயப்பட்டதுடன் ஒவ்வொரு வலயத்திலிருந்தும் கலந்து கொண்ட ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் தத்தமது வலயத்தின் ஆரம்பக்கல்வி அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டினையும் முன்வைத்திருந்தனர். குறிப்பாக ஆரம்பகல்வி தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் குறிப்பிட்ட ஒருசில வலயங்களின் அடைவு மட்டம் அதிகரித்திருக்கின்றது. அதேவேளை பல வலயங்களில் அதிகூடுதலான கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், அக்கரைப்பற்று கல்வி வலயம் போன்றவற்றினது சிறந்த கல்விச் செயற்பாடுகள் கூடுலான மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள உதவுயிருக்கின்றன.
அந்த அடிப்படையில் கடந்தாண்டில் (2013)தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகள் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் 70புள்ளிகளுக்குக் குறைவாக பெற்றுக் கொண்ட (விகிதாசாரத்தின்படி) வலயங்களில் முதன்மை வலயமாக அக்கரைப்பற்று கல்வி வலயம் காணப்படுகின்றது. இதற்காக இவ்வலயத்தின் ஆரம்பப்பிரிவிற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. இவ்வலயத்தின் ஆரம்பக்கல்விச் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுத்துச் செல்கின்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர், சேவைக்கால ஆலோசகர்களான எஸ்.எல். மன்சூர், ஏ.எல்.எம். இப்றாகீம் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(படங்களில் கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் மற்றும் ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர், வலயங்களில் கடமையாற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், சேவைக்கால ஆலோசகர்கள் ஆகியோர் செயலமர்வில் கலந்துகொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.)



Post a Comment