கொழும்பிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிப்பும், ரஷ்ய தூதரகமும்..!
(சத்தார் எம். ஜாவித்)
அந்நிய நாடான ரஷ்ய நாட்டின் தூதரகத்திற்காக இந்நாட்டின் பூர்வீக மக்களின் இருப்பிடங்களை அகற்ற எடுத்த முடிவுகள் எந்த விதத்தில் நியாயமான செயல்? இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வாழ்வில் தற்போது வெளிநாட்டுச் சக்திகள் ஆதிக்கம் செலுத்த முட்படுவதற்கு அரசின் அங்கீகாரம் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை தோற்று வித்துள்ளது.
இலங்கையில் ரஷ்ய தூதரகம் அமைக்க முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் கொழும்பு-7, பௌத்தாலோக மாவத்தையில் காலாகாலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களையும் அவர்களின் புனிதத் தளமான பள்ளிவாசலையும் அகற்றி அற்ப ரஷ்ய தூதுவராலயம் அமைப்பதற்கும் அதன் அநாச்சார நடவடிக்கைகளுக்கு இடங்கொடுக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இலங்கை வாழ் சகல முஸ்லிம்களும் தமது கடுமையான எதிர்ப்புக்களை தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்களை இந்த நாட்டில் இல்லாமல் செய்வதற்கு வெளிநாட்டுச் சக்திகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்து அதன் மூலம் தமது திட்டத்தில் ஒருபடி முன்னேறவே ரஷ்யத் தூதரகம் அமைப்பதற்கு இடம்கொடுத்து முஸ்லிம்களை முட்டாள்களாக்கி ஏமாற்றும் மற்றுமொரு கபட நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
சிறுபான்மைச் சமுகங்கள் மட்டும்மல்லாது ஏனைய சமய மக்களும் வாழும் புல்லஸ் றோட் பகுதியில் முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்படுவது இனவாதிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளின் ஒரு அங்கமாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான ஏமாற்றுப் போக்குகள் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும் அமைதிக்கும் ஏற்ற விடயங்கள் அல்லவென புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
பூர்வீகமாக வாழும் முஸ்லிம்களை அகற்றுமாறு கூறுவதற்கு ரஷ்ய அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் வழங்கியது? இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி இலங்கை வாழ் குடிமக்களை அவர்களது வாழும் பகுதிகளில் இருந்து அகற்றுமாறு கூறிவருகின்றமை சர்வதேச மனித உரிமை மீறலாகவே கூறவேண்டியுள்ளது.
வேற்று நாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கைக்குள் வந்து ஒரு சமுகத்தை தமது தூதரகப் பாதுகப்பிற்காக அகற்றக் கோரியதற்கு முதலில் அவரை இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும் என முஸ்லிம்கள் அரசிடம் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
இன்று முஸ்லிம்களின் விடயத்தில் கைவைக்கும் வல்லரசுகள் பின்னர் ஏன் இலங்கையின் முழு இறையான்மையிலும் கைவைக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் அரசுக்கு உள்ளது?
அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இடிமேல் இடி விழுவதுபோல் மேலும் கவலையை தோற்றுவித்தள்ளது. கடந்த இரு வருடங்களாக இலங்கையின் இனவாதக் கும்பல்களால் சமய, சமுக, மத மற்றும் உடல், உள ரீதியாக தொடராக மேற் கொள்ளப்பட்டு வரும் காடைத்தனங்கள் போதாததிற்கு ரஷ்யத் தூதரகம் அமைப்பதில் மற்றுமொரு சூழ்ச்சி அரங்கேற்றப்பட்டு வருகின்றமை சகல முஸ்லிம்களையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இந் நடவடிக்கைகள் எல்லாம் இலங்கை வாழ் முஸ்லிம்களை முற்றிலும் ஒடுக்குவதற்கான செயற்பாடுகளாகவே நோக்கப்படுகின்றது அரசியல் வாதிகளுக்கும், அரச அதிகாரிகளும் முஸ்லிம்கள் விடயத்தில் கிஞ்சித்தும் கவலைப்படாது தமது திட்டமிட்ட சூழ்ச்சிகள் மூலம் முஸ்லிம்கள் இருக்கும் இடங்களை தெரிவு செய்யும் கைங்கரியங்கள் இனவாத நடவடிக்கைகளுக்கு மெருகூட்டும் சதித்திட்டமாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படாத முன்னுரிமை அல்லது சலுகைகள் வெளிநாட்டுச் சக்திகளுக்கு ஏன் வழங்கப்பட வேண்டும்? தேர்தல் காலங்கள் வரும்போது எல்லாம் அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகளை வழங்கி சிறுபான்மை மக்களின் வாக்குகளை கொள்ளையடித்துவிட்டு ஏனைய விடயங்களில் தூக்கி எறியும் நிலைமைகளே இலங்கையின் அரசியல் வரலாறாக இன்று மாறியுள்ளது.
இலங்கையில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில்;தானா வெளிநாட்டு தூதரகங்கள் அமைக்க தெரிவு செய்யப்பட வேண்டும்? அமைதியாக வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பும் திட்டமிட்ட நடவடிக்கைகளாகவும் வெளிநாட்டு நெருக்குதல்களை சமாளித்து அதிலிருந்து விடுபடுவதற்கு இன்று பௌத்தாலோக முஸ்லிம்கள் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டு குடி மக்களை ரஷ்ய நாட்டுத் தூதுவரலாயத்தின் பாதுகாப்பிற்காக அகற்றுமாறு எவ்வாறு ரஷ்ய நாட்டு அதிகாரி அரசிடம் கேட்பார்? இது எந்த விதத்தில் நியாயமான செயல் ரஷ்ய அதிகாரியின் இந்த காட்டுமிராண்டித் தனத்தை முழு முஸ்லிம் சமுகங்களும் வன்மையாக கண்டிக்கின்றனர்.
தூதரகத்தை அமைக்க முன் செய்ய வேண்டிய விடயத்தை அதனை அமைத்து விட்டு செயற்படும் அரசின் கபடத் தனம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலாகும் என பாதிக்கப்பட்ட பகுதி முஸ்லிம் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் இந்த நாட்டு சிறுபான்மை மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை பௌத்தாலோக முஸ்லிம்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைளில் இருந்து வெளிப்படையாகிவிட்டது. கொழும்பில் பௌத்தாலோக மாவத்தையைவிட பல பாதுகாப்பான இடங்கள் இருக்கும்போது குறிப்பாக டி.ஆர் விஜயவர்த்தன மாவத்தையில் கூட தாராளமாக இடம் இருக்கும்போது மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ரஷ்ய தூதரகம் அமைக்க காணி தெரிவு செய்த இலங்கையின் புத்திசாலிகள் யார்? என மக்கள் வினவுகின்றனர்.
ஏற்கனவே இலங்கை வல்லரசுகளின் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட நிலையில் மேலும் மேலும் குற்றங்கள் சுமத்தப்படுவதற்கும், கண்டனங்கள் வெளியிடுவதற்கும் ஆளாகும் நிலைமைகளே இவ்வாறான விரும்பத்தகாத செயற்பாடுகளால் அதிகம் இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகள் எல்லாம் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்படும் பாரிய மனித உரிமை மீறல்களேயாகும்.
இதுவரை காலமும் பல பிரச்சினைகள் இடம்பெற்ற போதிலும் பொறுமை காத்த முஸ்லிம்கள் பௌத்தாலோக விடயத்தில் அரசு அந்நியர்களுக்கு வழி சமைக்குமாயின் இலங்கைக்கு அது பாரிய பின்விளைவுகளை தோற்றுவித்து இலங்கையின் சமாதானத்திற்கும், அமைதிக்கும் சவாலாகவே அமைவதுடன் பல்லின சமுகத்தில் பல பிரச்சினைகளுக்கு வழிசமைக்கும் மற்றொரு விடயமாகும்.
முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ரஷ்யத் தூதரகம் அமைக்கும் விடயத்தில் தமது காட்டமான கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து தூதரகத்திற்காக இடம் வழங்குவதை எதிர்க்க வேண்டுமென முஸ்லிம் மக்கள் அவசர வேண்டுகோலினை விடுக்கின்றனர்.
எமது பிரச்சினைகளை எமது அரசியல் தலைமைகளிடம் கதைத்து தீர்க்கவேண்டிய விடயங்களை ரஷ்ய அதிகாரிகளிடம் கதைத்து எந்தவித பயனும் கிட்டப் போவதில்லை. ஒரு சில அரசியல்வாதிகள் ரஷ்ய அதிகாரிகளுடன் கதைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டு முஸ்லிம் சமுகம் கவலை கொண்டுள்ளது.
வெளிநாட்டு சக்திகள் இந்த நாட்டிற்குள் வந்து இந்த நாட்டுப் பிரஜைகளை அடக்கவும், ஒடுக்கவும் ஊடுருவ முடியுமானால் இலங்கை வாழ் மக்கள் ஏன் வெளிநாட்டுச் சக்திகளின் மேற்படிச் செயற்பாடுகளை எதிர்க்கவும், கண்டிக்கவும் ஏன் முடியாது? என முஸ்லிம்கள் கேட்கின்றனர்.
யுத்தக் குற்றம் சம்பந்தமாக வல்லரசுகளுடன் இணைந்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும் இவ்வாறான நிலைமைகளில் அரசாங்கம் இலங்கையில் அந்த நாட்டுக்கு பாதுகாப்பாக தூதரகம் அமைத்துக் கொடுப்பதானது யானை தானாக தனது தலைக்கு மண்ணை அள்ளிக் கொட்டுவதற்கு ஒப்பானதாகவே நோக்கப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளால் எதிர் காலத்தில் அதன் விளைவுகளை அடையப் போவது யார் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லத் தேவையில்லை. இலங்கையை யுத்தக் குற்றத்திற்குள் சிக்க வைத்து மீண்டும் தமது ஆதிக்கத்திற்குள்; இலங்கையை கொண்டு வருவதற்கான புதியதொரு வியூகத்தை வல்லரசுகள் மேற்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த நாட்டு மக்களின் இருப்பில் அரசாங்கம் அக்கறை காட்டி அற்பத்தனமான வல்லரசுகளின் உதவிகளுக்காக ஆசைப்பட்டு குரங்கு ஆப்பிழுத்த கதையாக ஆகிவிடாது இந்த நாட்டுக்குள் அவர்களால் சமுகங்களுக்கிடையில் குரோதங்களையும், பிரச்சினைகளையும் தோற்றுவிக்க அனுமதி வழங்காது இந்த நாட்டு சகல பிரஜைகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்குமாறு முஸ்லிம் சமுகம் ஜனாதிபதியிடம் வேண்டி நிற்கின்றனர்.
எனவே ஜனாதிபதி முஸ்லிம்கள் என்றல்லாவிட்டாலும் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற வகையிலாவது அந்நிய சக்திகளின் சதி முயற்சிகளில் இருந்து பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

Post a Comment