இலங்கையில் மதசிறுபான்மையினர் மீது இன்னமும் நடக்கும் தாக்குதல்கள் - நவநீதம்பிள்ளை அறிக்கை
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கோரியுள்ளார். அடுத்தமாதம் 3ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில், சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையிலேயே ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த அறிக்கையின் மேலதிகமாகத் திருத்தப்பட்ட பதிப்பு நேற்று 24-02-2014 ஐ.நாவின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதால், சிறிலங்காப் படைகள் மற்றும், விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு விசாரணைகள் கண்டறியத் தவறிய உண்மைகளை கண்டறியும் வகையில், சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தமது பணியகம் தயாராக இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2006இல் திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, மூதூரில் 17 தொண்டுப் பணியாளர்கள் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்த, பொறுப்புக்கூறும் விசாரணைகளில் பெரியளவில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்றும், நவநீதம்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.
மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், எந்த சட்டநடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார்.
சுமார் 8722 சொற்களைக் கொண்டதாக, இந்த 18 பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது.
“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சில நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் ஏற்றுக்கொள்கிறது.
இருந்தபோதிலும், கடந்த கால மனிதஉரிமைகள், மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரமான, நம்பகமான, விசாரணைகளை நடத்த தவறியுள்ளது.
இந்த அறிக்கையில், மதசிறுபான்மையினர், மீது இன்னமும் நடக்கும் தாக்குதல்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், சட்டவாளர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து புதிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வழங்க முன்வந்த தொழில்நுட்ப உதவி மற்றும் சிறப்பு நடைமுறைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
அதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக புதிய சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில், உள்நாட்டு விசாரணை பொறிமுறை கண்டறியத் தவறிய உண்மைகளை கண்டறிவதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் பரிந்துரை செய்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment