ஹம்பாந்தோட்டையில் சரத் பொன்சேக்காவின் கூட்டத்திற்கு குண்டர்களினால் தடை..!
ஜனாதிபதியின் சொந்த ஊரான பெலியத்த பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றை நடத்த விடாது ஆளும் கட்சியின் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் அச்சுறுத்தியதாகவும் இதனையடுத்து கூட்டத்தை இரத்துச் செய்ததாகவும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தனியார் காணி ஒன்றில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கான மேடையை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு ரி.56 ரக துப்பாக்கிகளுடன் சென்ற சிலர் மேடையை தீயிடப் போவதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாகவும் அச்சுறுத்தி, அங்கிருந்தவர்களை விரட்டியுள்ளனர்.
இது குறித்து நான் தேர்தலுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தென் மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தேன். கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க முடியாது என்றாலும் அங்கிருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
நான் அந்த பிரதேசத்திற்கு சென்ற போது அங்கு 6 முதல் 7 பொலிஸார் இருந்தனர். இலக்க தகடு இல்லாத வாகனத்தில் வந்த குண்டார்கள், பொலிஸ் அதிகாரிகளை தள்ளிக் கொண்டு நான் இருக்கும் இடத்திற்கு வந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்த பொலிஸார் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆளும் கட்சியின் குண்டர்களே அங்கு வந்திருந்தாகவும் நடத்தப்படும் தேர்தல் எவ்விதத்திலும் நியாயமான தேர்தலாக இருக்காது என சமாதானத்தை மதிக்கும் மக்களுக்கு சர்வதேசத்திற்கும் கூறிக்கொள்வதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
Post a Comment