ஒரு கிராமத்தின் எழுச்சி அந்த பாடசாலை மாணவர்களின் பரீட்சை முடிவுகளில் தங்கியுள்ளது - றிசாத் பதியுதீன்
ஒரு கிராமத்தின் எழுச்சி அந்த பாடசாலை மாணவர்களினால் கொண்டுவரப்படும் பெறுபேருகளிலேயே தங்கியுள்ளது.இதனை மையமாகக் கொண்டு இக்கிராமம் முன்னேற வேண்டும் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா பாவற்குளம் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இன்று மாலை இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் இன் தாஜூதீன் ஜலால்தீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது,
வவுனியா மாவட்டத்தில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் கல்வி தரத்தில் குறைவு காணப்படுகின்றது.இது குறித்து அதிபர்களும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
பல்கலைக்கழக அனுமதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்,இதற்காக வேண்டி அயராது பாடுபட வேண்டும்.மாணவர்களின் கல்வி தொடர்பில் ஆராய புத்தி ஜீவிகள் கொண்ட கல்விக் குழுக்கள் பிரதேச மட்டத்தில் எற்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விளைாயட்டை போன்று கல்வியிலும் திறமைசாலிகள் தேவைப்படுகின்றார்கள்.அண்மையில் வெளியான இலங்கை நிர்வாக சேவை பரீட்சை பெறுபேற்றில் இந்த ஊரைச் சேர்ந்த ஒரு சகோதரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இது நல்ல முன்மாதிரியாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக,ஆளுநரின் ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்,நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment