Header Ads



கல்முனை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகள் சீர் செய்யப்படுமா..?

(முஹம்மது காமில்)

கல்முனை மாநகரம் இலங்கைத்தீவின் தனிச்சிறப்பு மிக்க மாநகர்களில் ஒன்றாகும். எமது கடந்த கால வரலாறுகளை ஒப்பிட்டு நோக்கும் போது எமது நகரின் தனிச் சிறப்பு மற்றும் பெருமை புலப்படும். எமது மாநகரின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்அந்தளவிற்கு பாரம்பரியம் செல்வாக்கு மிக்கது. இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்ட அரசியல் தலைமைகள் மற்றும் முஸ்லிம்களுக்கென்று தனி அங்கீகாரம் வழங்கிய அரசியல் கட்சியான முஸ்லிம்காங்கிராஸ் இன்னும் எத்தனையோ அரசியல் வாதிகள்,கல்வியலாளர்கள்,சமூக நல விரும்பிகள் உதயமாகிய இடம்தான் இந்த கல்முனை மாநகரம்.

இருந்த போதிலும் இன்றைய நிலையில் எமது ஊரில் பல்வேறு பட்ட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும்,மாகாண சபை உறுப்பினர்கள் ஏன் மாநகர சபை மேயர் தொடக்கம் அதன் உறுப்பினர்கள் பலர்  மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் எமது பிரதேசத்தில் ஆட்சி புரிந்தும் எமது மாநகரானது அதன் அபிவிருத்தி பாதையில் பின்னோக்கி செல்வதன் காரணம் என்ன? எமது ஊரில் காலத்துக்கு காலம் உருவான சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளினால் ஒவ்வொரு தடவையும் எமது மாநகரின் அபிவிருத்தி என்பது பகல் கனவு போல ஆகிவிட்டது அதிலும் குறிப்பிட்டு சொல்ல போனால் கல்முனை மாநகரின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் வசதிகள் மிகச் சீரழிந்த நிலையிலே காணப்படுகின்றது. இதற்க்கு காரணகர்த்தாக்கள் யார்..? அரசியல் வாதிகாளா அல்லது அங்கீகாரம் வழங்கிய பொதுமக்களா?

கல்முனை மாநகரின் உட்கட்டமைப்பை பொருத்தமட்டில் முதலில் வீதியின் வடிகாங்களின் நிலைமையினை சற்று உற்றுநோக்குவோம். தற்போதைய நிலையில் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல போனால் கல்முனை மாநகரின் புகழ் பூத்த வீதிகளின் முன்மாதிரியாக இருக்க வேண்டிய கல்முனைக்குடி பெரிய பள்ளிவாசல் வீதியின் வடிகான்களின் நிலையினை உற்றுநோக்கும் போது எமது ஊர் அபிவிருத்தி பாதையில் செல்லுகின்றதா அல்லது பொதுமக்களை அழிவுப்பாதையை நோக்கி இழுத்துச் செல்லுகின்றதா என்று எண்ணத்தோன்றுகின்றது. காரணம் இல்லாமல் இல்லை. இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் அன்றைய அரசியல் வாதிகளினால் ஊரில் தேங்கும் மழைக்கழிவு நீர் கடலை சென்றடைய உருவாக்கப்பட்ட நடராசா வாய்க்கால் எனும் பெருமை பொருந்திய மழைக்கழிவு நீர் செல்லும் வடிகால்அமைப்பானது இன்று குப்பைகள் நிறைந்த தோற்று நோயை உண்டுபண்ண கூடிய விசக்கிருமிகளின் தங்குமிடமாக காணப்படுகின்றமை எம்மை அதிர்ச்சியடைய செய்கின்றது.

கல்முனைகுடியின் அதாவது குறிப்பிட்டு சொல்லபோனால் மூன்றாம் குறிச்சியில் இருந்து(செய்லான் வீதி) பனிரெண்டாம் குறிச்சு(நகர மண்டப வீதி) வரை இடைப்பட்ட பிரதேசத்தில் பெய்யும் அத்தனை மழை நீரையும் ஒழுங்குற கடலுக்கு சேர்க்கும் பணியை இந்த வாய்க்கால் தான் தொன்று தொட்டு செய்கின்றது செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது சுனாமியினால் முற்று முழுதாக சேதமாக்கப்பட்ட இந்த வாய்க்கால் ஆனது கடந்த வருடம் தான் பிரதேச வாழ் மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க மாகாண சபையின் நிதி ஓதிக்கீட்டின் மூலமும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடனும்  மீள நிருமானிக்கப்பட்டது யாவரும் நன்கறிந்ததே கடந்த காலங்களில் ஆறடிக்கு மேல அகலமுடைய இந்த வாய்க்கால்  பிரதேச வாழ் மக்களால் கொஞ்சக்கொஞ்சமாக சுவிகரிக்கப்பட்டு இன்று நான்கு அடிக்கும் குறைவாக ஒடுங்கிய நிலையிலேய உள்ளது. இந்த வாய்க்காலின் வரலாறுகளை அறிந்தவர்களுடன் இதனைப்பற்றி அறிந்து கொள்ளலாம். அதே நேரம் தற்போது  புதிதாக நிருமாணிக்கப்பட்ட வாய்க்காலுக்கு ஒழுங்கான மற்றும் பாதுகாப்பான மூடிகள் வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரையில்  இடப்படாதது ஏன்..? என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதன் காரணத்தினால்தான் குப்பைகள் அதிகளவு அந்த வாய்க்காலினும் ஓன்று சேருகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

கடந்த வரும் 2011 ல் ஏற்ப்பாட வெள்ளை அனர்த்தத்தில் எமது ஊர் மக்களை பாதுகாத்ததே இந்த வாய்க்கால்தான். இருந்தபோதிலும் கடந்த காலங்களில் பெய்த மழைநீர் வடிந்தோடமையின் காரணமாக நீர் தேங்கி நின்று பின்னர் அசுத்த மடைந்த நிலையில் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் காட்சியளிக்கின்றது குறிப்பாக ஹுதாப்பள்ளிவாயல் மற்றும் றய்யான் பள்ளிவாயல் ஆகிய பிரதேசத்தையூடறுத்துச்செல்லும் வடிகானில் மழைநீர் ஓடமுடியாமல் மிக நீண்டகாலமாக தேங்கிக்கிடக்கின்றது. இங்கு கழிவுப்பொருட்களும் குப்பைகளும் பெருமளவு போடப்பட்டுள்ளன. இவற்றைத் துப்பரவு செய்ய கல்முனை மாநகரசபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் அதே நேரம் இந்த வாய்க்காலில் தேங்கி இருக்கும் அசுத்தம் அடைந்த மழை நீரினால் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் மற்றும் மலேரியா, ஏனைய தொற்றுநோய்கள் பரவும் அபாய நிலை இப்பகுதியில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பல்வேறுமட்ட அரசியல் தலைமைகள் மற்றும் உயர்பொறுப்புகளில் உள்ள அரச அலுவலர்கள் மற்றும் ஏனைய வர்த்தகர்கள் பெருமளவில் வசித்து வரும் வீதியின் நிலை இப்படியாக இருந்தால் ஏனைய வீதிகளின் நிலையினை சொல்லவா வேண்டும் என்று பிரதேசவாழ் மக்கள் அங்கலாய்கின்றனர்.
இவிடயம் தொடர்பில் மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிசாம் காரியப்பர் அவர்கள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.

1 comment:

  1. ஊழல் மற்றும் குரோதம் என்ற வார்த்தைகள் அற்ற ஒரு புதிய சமூதாயம் உருவாகும் வரை இந்த கல்முனைக்கு சாபக்கேடுதான்.

    ReplyDelete

Powered by Blogger.