பெல்ஜியத்தில் குழந்தைகளை கருணைக் கொலை செய்யலாம்..!
நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் கருணைக் கொலையை அனுமதிக்கும் ஒப்புதல் மசோதா பெல்ஜியம் பாராளுமன்றத்தின் கீழ்சபையில் நேற்று பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் அந்நாட்டு அரசரின் ஒப்புதல் பெற்று இது சட்டமாக்கப்படும்.
இதுநாள் வரை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கே தங்களது இறப்பைப் பற்றி முடிவு செய்யும் உரிமை உண்டு என்ற டச்சு சட்டத்திற்கே பெல்ஜியத்தில் ஆதரவு இருந்து வந்தது. பெரியவர்களுக்கான கருணைக்கொலை இங்கு கடந்த 2002-ம் ஆண்டில் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.
நேற்று கூடியிருந்த பிரதிநிதிகள் மன்றத்தில் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாகவும், 44 பேர் எதிர்த்தும் வாக்களித்திருந்தனர். 12 பேர் வாக்களிக்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையோரும், ஆளும்கட்சியின் சோஷியலிசவாதிகளும், தாராளவாதிகளும் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.
பிரதமர் எலியோ டி ரூபோவின் கூட்டணியில் இருக்கும்போதிலும் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இதனை எதிர்த்து வாக்களித்திருந்தனர். கிறிஸ்துவ, முஸ்லிம் மற்றும் யூதத் தலைவர்கள் அனைவரும் அரிய விதமாக ஒருங்கிணைந்து இந்த மசோதாவிற்கு எதிரான கருத்துகளை அளித்தனர். கத்தோலிக்க மதகுருமார்களோ இந்த திட்டத்தை எதிர்த்து பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
இந்த மசோதா குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மரண ஊசி குறித்தது அல்ல. நோய்வாய்ப்பட்டிருப்பதால் மரணத்தைத் தவிர்க்க முடியாமல், துன்பப்படும் குழந்தைகளுக்கு அளிப்பது குறித்தது என்று இதற்கு ஆதரவு அளித்துள்ள கரீனா வான் காட்டர் என்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். தவறான பிரயோகத்தைத் தடுக்க இதில் நிறைய நிலுவைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment