பங்களாதேஷில் இலக்கு வைக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்..!
(Thoo) அண்டை நாடான மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்குள் எல்லை தாண்டி வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை அடையாளம் கண்டு கணக்கெடுக்கும் பணியை நடத்த வங்கதேச அரசு தீர்மானித்துள்ளது. மியான்மரின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இரண்டு அகதி முகாம்களில் தற்போது சுமார் முப்பதாயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பதிவு செய்யப்பட்டுதங்கியுள்ளார்கள் என்றாலும், இந்த முகாம்களுக்கு வெளியே பதிவு செய்யப்படாமல் மூன்று லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடந்த இருபது வருடங்களில் வங்கதேசத்துக்குள் வந்து குடியேறி வாழ்கின்றனர் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
பதிவு செய்யப்படாமல் வங்க தேசத்துக்குள் வாழும் ரோஹிங்கியாக்கள் அனைவரையும் கணக்கெடுத்து தரவு தொகுதி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே வங்கதேச அதிகாரிகளின் நோக்கம் என பிபிசியின் வங்காள சேவையில் பேசிய அரசாங்க அதிகாரிகள் கூறினர்.
வங்கதேசத்தின் வெளியுறவுத்துறைச் செயலரான ஷாஹிதுல் ஹக், ரோஹிங்கியாக்கள் மியான்மர் அரசு தீர்வுகாண வேண்டிய பிரச்சனை என்றார். “மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ள மக்கள் பற்றி எங்களிடம் எவ்வித விவரமும் இல்லை. அவர்களைப் பற்றிய விவரங்களை நாங்கள் சேகரிக்க வேண்டும். அந்த தகவல்களை எடுத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
இந்தப் பிரச்சினை மியான்மர் பக்கத்தில்தான் ஆரம்பித்துள்ளது எனவே இதற்கான தீர்வும் அங்கிருந்துதான் வர வேண்டும். மியான்மர் அரசாங்கம்தான் தீர்வு காண முடியும். அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மியான்மர் மக்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டியது அந்நாட்டு அரசாங்கத்தின் கடமை.
வங்கதேச நிலப்பரப்பில் இவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.”என அவர் கூறினார். ரோஹிங்கியாக்கள் பற்றி வங்கதேச அரசாங்க வட்டத்தில் எதிர்ப்பும் அச்சமும் நிலவுவதைப் பிரதிபலிப்பதாக டாக்காவின் காக்ஸ் பஜார் வட்டகையில் துணைக் கமிஷனராகவுள்ள முகமது ரூஹுல் அமீனின் கருத்து அமைந்திருந்தது.
“ரோஹிங்கியாக்கள் பார்க்க வங்கதேச மக்களைப்போலவே இருப்பதால், உள்ளூர் மக்களிடம் இவர்கள் எளிதாக கலந்துவிடுகிறார்கள். ஆனால் வங்கதேசத்தின் சட்ட ஒழுங்குக்கு இவர்கள் பெரும் ஆபத்தை உருவாக்குகிறார்கள். வங்கதேசத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகவே ரோஹிங்கியாக்கள் அமைந்திருக்கிறார்கள்.” என அவர் தெரிவித்தார்.
ரோஹிங்கியாக்கள் பற்றி அமீன் இப்படிக் கூறினாலும், ஒதுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டு கஷ்டத்தில் உழல்கின்ற சிறுபான்மை மக்கள் அவர்கள் என்று ஐ.நா அவை கூறுகிறது. மியான்மரின் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என அது தெரிவிக்கிறது.
ஆனால் மியான்மர் அரசோ வங்கதேசத்திலிருந்து தமது நாட்டுக்கு வந்த சட்டவிரோதக் குடியேறிகள் இவர்கள் என்று கருதுகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மரின் புத்த தீவிரவாதிகள் தாக்கிய சம்பவங்களும் அங்கு தொடர்ந்து நடந்துள்ளன.
தற்போது வங்கதேசத்தில் ரோஹிங்கியாக்களை கணக்கெடுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத் துறையினர், உள்ளூர் மக்களிடம் இருந்து உதவி பெற்று ரோஹிங்கியாக்களை அடையாளம் காணப்போவதாகக் கூறுகின்றனர்.

இரு தலைக் கொள்ளிகளாகத் தவிக்கும் இவர்களுக்கு அல்லாஹ் ஈமானையும், ஆரோக்கிய நிம்மதியையும் வழங்கப் பிரார்த்திப்போம். பரிதாபம், இவர்களும் எமது சகோதரர்களே.
ReplyDelete