'யுவன் சங்கர் ராஜா' இஸ்லாத்தை ஏற்றேன் என விளக்கம் அளித்த பின்பும்..!
(சுவனப் பிரியன்)
நபித் தோழர் அபுபக்கர் நபி அவர்கள் மீது இருந்த அர்ப்பணிக்கும் ஆசை அளவிட முடியாதது. நபியவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும் பிரியமும் அப்படித்தான். எனவே, அவர்களுக்காகத் தங்களது கழுத்து துண்டிக்கப்படுவதையும் அவர்கள் பொருட்படுத்தியதில்லை. ஆனால், நபி அவர்களின் நகத்திற்கு ஒரு சேதம் ஏற்படுவதையோ, அவர்களுக்கு ஒரு முள் தைப்பதைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
ஒருமுறை அபூபக்ர் கல் நெஞ்சக்காரர்களால் கடுமையாக மிதிக்கப்பட்டார்கள்; வன்மையாக அடிக்கப்பட்டார்கள். காரணம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுதான். அந்நேரத்தில் அங்கு வந்த உத்பா, ஆபூபக்ரை செருப்பால் அடித்தது மட்டுமல்ல, அவர்களது முகத்தை செருப்பால் தேய்க்கவும் செய்தான். அவர்களது வயிற்றின் மீது ஏறி மிதித்தான். அவர்களது மூக்கு சிதைக்கப்பட்டதால் மூக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. “தைம்’ கிளையினர் அன்னாரை ஒரு துணியில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் வைத்தார்கள். அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே எண்ணி இருந்தார்கள்.
அன்று பகலின் இறுதியில் அவர்கள் பேசத் தொடங்கியபோது “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்றுதான் கேட்டார்கள். இதைக் கேட்ட தைம் கிளையினர் அவரைக் குறை கூறிவிட்டு அன்னாரது தாயார் உம்முல் கைடம் "இவருக்கு உணவளியுங்கள்; ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; அவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு எழுந்துச் சென்றனர்.
அன்னாரது தாய் அனைவரும் சென்றபின் உணவு சாப்பிட அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அபூபக்ரோ “அல்லாஹ்வின் தூதர் என்னவானார்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அன்னாரது தாய் “உனது தோழரைப் பற்றி அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒன்றுமே எனக்குத் தெரியாது” என்று கூறினார். “நீங்கள் கத்தாபின் மகள் உம்மு ஜமீல் (உமரின் சகோதரி) இடம் சென்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்து வாருங்கள்” என்று அபூபக்ர் கூறினார்கள். தாயார் உம்மு ஜமீலிடம் வந்து “அபூபக்ர் உன்னிடம் முஹம்மது நபியைப் பற்றி விசாரித்து வர என்னை அனுப்பினார்” என்று கூற, அவர் “எனக்கு அபூபக்ரையும் தெரியாது, முஹம்மது நபியைப் பற்றியும் தெரியாது. நீங்கள் விரும்பினால் உங்களுடன் உங்கள் மகனைப் பார்க்க நான் வருகிறேன்” என்று கூறினார். அவர் “சரி” எனக் கூறவே, உம்மு ஜமீல் அவருடன் அபூபக்ரைப் பார்க்கப் புறப்பட்டார்.
உம்மு ஜமீல் அபூபக்ரை மயக்கமுற்று மரணித்தவரைப் போன்று பார்த்தவுடன் கூச்சலிட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கல் நெஞ்சம் கொண்ட இறைநிராகரிப்போரும் பாவிகளும் உங்களை இவ்வாறு செய்துவிட்டார்கள். அல்லாஹ் உங்களுக்காக அவர்களிடம் பழிவாங்க வேண்டுமென நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார். அவரிடம் அபூபக்ர் (ரழி), “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்று கேட்டதற்கு “இதோ உமது தாய் (நமது பேச்சை) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறவே அவரைப் பற்றி பரவாயில்லை என்று கூறியவுடன் “நபி அவர்கள் நல்ல விதமாக பாதுகாப்புடன் இருக்கிறார்கள்” என்று உம்மு ஜமீல் கூறினார். “அவர்கள் எங்கிருக்கிறார்” என்று அபூபக்ர் கேட்கவே “அவர்கள் தாருல் அர்கமில் இருக்கிறார்கள்” என்றவுடன் “அல்லாஹ்வின் தூதரைச் சென்று பார்க்காமல் நான் உண்ணவுமாட்டேன், குடிக்கவுமாட்டேன். இது அல்லாஹ்விற்காக என்மீது கடமையாகும்” என்று நேர்ச்சை செய்து கொண்டார்கள்.
அன்னாரது தாயாரும் உம்மு ஜமீலும் ஆள் நடமாட்டங்கள் குறைந்து மக்களின் ஆரவாரங்கள் அமைதியாகும் வரை சற்று தாமதித்து நபி அவர்களிடம் அவரை அழைத்துச் சென்றார்கள். அபூபக்கர் நடக்க இயலாமல் அவர்கள் இருவர் மீதும் சாய்ந்து நடந்து சென்றார்கள்.
ஆதார நூல்:(அல்பிதாயா வந்நிஹாயா)
இதுதான் ஆரம்ப கால இஸ்லாமியரின் நிலை. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று கூறுபவர்கள் இந்த வரலாற்றைப் படித்து தெளிவுறவேண்டும். இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக எந்த தவறும் செய்யாத அபுபக்கர் இந்த அளவு கொடுமைபடுத்தப்படுகிறார். குரைஷி குலமான உயர் குலத்தைச் சேர்ந்து இவருக்கே இந்த நிலை என்றால் அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிலால் போன்ற நீக்ரோக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
யுவன் சங்கர் ராஜா எவரது வற்புறுத்தலும் இல்லாமல் நானாக குர்ஆனை படித்து விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்று விளக்கம் அளித்த பின்பும் நமது பத்திரிக்கைகள் எந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டன என்பதை நாம் அறிவோம். ஒரு தளத்தில் இந்துத்வா நபர் இவ்வாறு பின்னுட்டம் இட்டிருந்தார். 'எனது கையில் மட்டும் யுவன் கிடைத்தால் என் கையாலேயே கொன்று விடுவேன்'. எந்த அளவு வன்மம் இவர்களிடத்தில் உள்ளது என்பது தெரிகிறதா?
சிம்புவும், ராஜேந்தரும் குடும்பத்தோடு கிறித்தவ மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டால் அது அவர்களுக்கு பெரிதாக தெரியாது. ஏனெனில் இந்து மதத்தைப் போலவே கிறித்தவ மதத்திலும் வர்ணாசிரமம் நுழைந்து பல காலம் ஆகி விட்டது. பெயர் மட்டும் தான் மாறும் மற்ற சடங்குகள் அனைத்தும் இந்து மதத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் இஸ்லாத்தில் இந்த கதை நடக்காது. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே தனது வீட்டில் தனது தந்தை கொலு வைத்து வழிபடுவதை யுவன் கண்டித்ததாக பத்திரிக்கைகளில் பார்த்தோம். இளையராஜா பார்பனியத்தை சுவீகரித்துக் கொண்டார். பார்பனர்களுக்கு சேவை செய்வதை தனது கடவுள் பணியாக ஏற்றுக் கொண்டார். ஆனால் இளைய தலைமுறையைச் சேர்ந்த யுவனுக்கு தனது சுய மரியாதையை விட்டுத்தர மனமில்லை. இன்று உலகின் இஸ்லாமிய சகோதரர்களில் ஒருவராகியுள்ளார். அவரது தூய்மையான இந்த மன மாற்றம் எந்த சிக்கலும் இல்லாமல் தனது வாழ்வை குர்ஆனோடு இணைத்துக் கொள்ள அந்த ஏக இறையை பிரர்த்தித்தவனாக இந்த பதிவை முடிக்கிறேன்.

Post a Comment