சவூதி அரேபிய நாட்டவருக்கு இதயம் வலதுபுறத்தில்
சவூதி அரேபிய நாட்டவரான ஜவாட் சல்மான் அல் ஷைப் என்பவருக்கு இதயம் வலது புறத்தில் அமைந்துள்ளது. வழமையாக இதயம் இடதுபுறமே அமைந்திருக்கும் நிலையில் இது மருத்துவ உலகில் அபூர்வமாக கருதப்படுகிறது.
எனினும் தனக்கு 24 வயதாக இருக்கும் போது தனது இதயம் வலது புறத்தில் இருப்பது மருத்துவ சோதனை மூலம் தெரிய வந்ததாக ஷைப் கூறியுள்ளார். அரச தொழிலுக்காக விண்ணப்பித்து அதற்காக மன்னர் பஹ்த் மருத்துமனையில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே ஷைப்புக்கு இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
இந்தநிலை தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஷைப் ஆரம்பத்தில் பயந்தபோதும் அதனை மருத்துவர்கள் தெளிவுபடுத்தி அவரது அச்சத்தை போக்கியுள்ளனர். இந்த மாற்றம் சுகாதாரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு குழந்தை கருவுற்று ஆரம்ப வாரங்களில் இதயம் நெஞ்சின் வலதுபுறம் இடம்மாறும் நிலை ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது குறித்து அமெரிக்காவின் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனம் தனது இணைய பக்கத்தில் விபரிக்கும் போது இதய உருவாக்கம் அது நிலைகொள்ளும் இடம் குறித்து மருத்துவ ரீதியில் இன்னும் முழுமையான தெளிவு ஏற்படாததால் இதயம் வலது அல்லது இடது பக்கம் இருப்பதற்கான காரணம் கூற முடியாதுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 56,000 பேரில் ஒருவர் இதயம் இடம்மாறி பிறப்பதாக ஜித்தா தேசிய மருத்துவமனையில் இதய நோய் தொடர்பான ஆலோசகர் டொக்டர் எஸ்.பி. டொக்ரா குறிப்பிட்டார். வயது வந்த நிலையில் இந்த பிரச்சினை சதாரணமானது. அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Post a Comment