வெப்சைட்டில் பொருட்கள் ஓடர்கொடுத்தால், ஆளில்லா குட்டி விமானத்தில அவை வந்தடையும்
வெப்சைட்டில் பொருட்கள் வாங்கிய அரை மணி நேரத்தில், ‘ஆக்டோகாப்டர்’ என்ற மினிட்ரோன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் முயற்சியில் அமெரிக்க வர்த்தக நிறுவனம் அமேசான் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். புத்தகம், போன், பொம்மைகள் போன்றவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் பொருட்களை சப்ளை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக ‘ஆக்டோகாப்டர்’ என்ற ஆளில்லா குட்டி விமானத்தை(மினி ட்ரோன்) உருவாக்கியுள்ளது.
இதில் உள்ள பெட்டியில் வாடிக்கையாளர் வாங்கும் 2.3 கிலோ எடைக்கு உட்பட்ட பொருட்களை வைத்து அனுப்ப முடியும். ஜிபிஎஸ் கருவி மற்றும் மின் மோட்டார் உதவியுடன் இயங்கும் இந்த ஆக்டோகாப்டர் அமேசான் மையங்களில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களிடம் அரை மணி நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்து விடும்.
இது குறித்து அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெசாஸ் கூறுகையில், ‘‘வாகனங்களில் பொருட்களை அனுப்புவதைவிட, இந்த ஆக்டோகாப்டர் மூலம் பொருட்கள் டெலிவரி செய்வது சுற்றுச்சூழலுக்கு உகந்தது. அமெரிக்க அரசிடமிருந்து முறையான அனுமதி கிடைத்தவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த டெலிவரி சேவைக்கு அமேசான் ‘பிரைம் ஏர்’ என பெயரிட திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் அமலுக்கு வர 4 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம்’’ என்றார்.

Post a Comment