யூசுப் அல் கர்ழாவி இராஜினாமா
(Tn) முன்னணி இஸ்லாமிய அறிஞரான கலாநிதி யூசுப் அல் கர்ழாவி சுன்னி முஸ்லிம்களின் மதிப்புக்குரிய நிறுவனமான அல் அஸ்ஹரின் சிரேஷ்ட அறிஞர்களின் கவுன்ஸிலிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கர்ழாவி தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் அல் அஸ்ஹர், ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டது மற்றும் இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவளித்ததற்கு அவர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
”நான் எனது இராஜினாமாவை எகிப்து மக்களிடம் சமர்ப்பிக்கிறேன். அவர்கள்தான் அல் அஸ்ஹரின் உண்மையான உரிமையாளர்கள். மாறாக அல் அஸ்ஹர் தலைவரல்ல” என்று கர்ழாவி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அல் அஸ்ஹரின் மேல்நிலை அதிகாரியான அப்பாஸ் ஷவ்மான், மஹ்வார் தொலைக் காட்சிக்கு நேற்று முன்தினம் தொலை பேசி ஊடே கூறும் போது, கர்ழாவியின் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.
அல் அஸ்ஹர் தலைமை இமாம் அஹ்மத் அல் தய்யிப் மற்றும் அதன் ஏனைய முன்னணி தலைவர்கள், இஸ்லாமியவாதியான ஜனாதிபதி மொஹமட் முர்சியை பதவி கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சியாளர்களுக்கு ஆதரவானோர் என கர்ழாவி விபரித்துள்ளார்.
அதேபோன்று அல் அஸ்ஹரின் ஆலோசனை சபையான சிரேஷ்ட அறிஞர்களின் கவுன்ஸில் எகிப்தில் நிகழ்ந்த அண்மைய படுகொலைகள் மற்றும் மக்களை பயமுறுத்தும் குற்றச்செயல்கள் தொடர்பில் வாய்திறக்காததற்கும் அவர் கண்டனம் வெளியிட்டார். இதில் அண்மைய வன்முறைகள் தொடர்பில் ஆலோசிக்க அல் அஸ்ஹர் தலைமை இமாம் தய்யிப் அறிஞர் குழுவை கூட்டாததற்கும் அவர் விமர்சனம் வெளியிட்டார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த யூசுப் அல் கர்ழாவி 1961 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கமால் அப்துல் நாஸர் காலத்தில் மூன்று முறை சிறைப் பிடிக்கப்பட்டதை அடுத்து 1962 ஆம் ஆண்டு கட்டார் நாட்டுக்கு இடம்பெயர்ந்தார். பின்னர் எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி மூலம் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டபின் 2011 ஆம் ஆண்டு முதல் முறை நாடு திரும்பினார்.

Post a Comment