சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு குரல்கொடுக்க அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர் - அஸாத் சாலி
சுனாமி பேரலைகள் ஏற்பட்டு இன்றுடன் ஒன்பது வருடங்கள் பூர்த்தி அடைகின்றன. சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு முதலில் எனது அனுதாபங்களை மீண்டும் ஒரு தடவை தெரிவித்துக் கொள்கிறேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட ஆண்டு முதல் அரசு வருடா வருடம் இன்றைய தினத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இரு நிமிட மௌன அஞ்சலியை தேசிய ரீதியாகச் செலுத்தி வருகின்றது. நாமும் அதில் பங்கேற்று எமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றோம்.
இறந்தவர்களை நினைவு கூறுவது ஒரு புறம் இருக்கட்டும்.அது கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயம் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துள்ளதா? சுனாமிக்குப் பின் தென் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை காட்டி நாட்டையே கட்டி எழுப்பியிருப்பது போன்ற ஒரு மாயையை அரசு ஏற்படுத்த முனைகின்றது.
சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டதைப் போன்ற நிவாரணங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? குறிப்பாக சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மக்களுக்காக சவூதி அரேபிய அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 500 வீடுகளின் இன்றைய கதி என்ன? என்பதை அரசாங்கம் முற்றாக மறந்து விட்டமை கவலைக்கு உரியதாகும். இந்த நாட்டில் தலைவிரித்தாடும் இனவாதத்தின் உச்ச கட்டம் தான் இது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் கூட குடியேற விடாமல் தடுப்பதை இனவாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி குறிப்பிடலாம். எந்த விதமான விட்டுக் கொடுப்புக்களுக்கும் சம்மதிக்காமல் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாத ஒரு பிரிவு அந்த வீடுகள் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டு நிற்பதில் என்ன நியாயம் உள்ளது. இந்த வீடுகள் குறிப்பிட்ட இடத்தில் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் அவற்றின் நிர்மாணப் பணிகள் தொடங்கப் படுவதற்கு முன் அதை எதிர்த்திருக்கலாம். அப்போது வேறு இடத்தில் அந்த வடுகள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் கட்டி முடியும் வரை காத்திருந்து திறப்பு விழா நடக்கவிருந்த சந்தர்ப்பத்தில் எதிர்ப்பை கிளப்பி அது தமக்கு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து அதை தடுத்தமையானது திட்டமிட்ட பகற் கொள்ளையாகும்.
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதிகளும்,அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளும்,அவற்றின் பிரதி நிதிகளும் இன்று தமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேற்கும் துணிவின்றி உள்ளனர். மக்களுக்காக குரல் கொடுத்தால் எங்கே தமது வண்டவாளங்கள் தண்ட வாளத்தில் ஏறிவிடுமோ என்ற அச்சம் தான் இதற்கு காரணம்.
500 வீடுகளும் கட்டப்பட்டு சுமார் ஏழு ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்னும் மக்கள் குடியேற முடியாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த வீடுகள் அமைந்துள்ள சூழல் தற்போது புற்பூண்டுகளும் புதர்களும் நிறைந்த பூமியாக மாறி வருவதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இது மிகவும் கவலைக்கிடமான விடயம். இலங்கை முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சவூதி அரேபிய அரசு கோடிக்கணக்கான ரூபாயை இதில் செலவிட்டுள்ளது.ஆனால் அது இன்று பிரயோசனமின்றி கிடக்கின்றது. இந்த விடமைப்புத் திட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் கூட இன்று வரை எவ்வித மாற்றுத் திட்டத்தையும் முன் வைக்கவில்லை. அந்த மக்கள் கடந்த ஒன்பது வருடங்களாக பெரும் அல்லல் பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
இந்த விடயத்தில் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் கூடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி வகுக்க வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இந்த விடயத்தில் தலையாய பொறுப்பு உள்ளது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது. மக்களின் வாக்குகளை சூறையாடி சொகுசான வாழ்வை அனுபவித்து வரும் அவர்கள் அந்த மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது மேலானது என்பதை நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.
.jpg)
இது விடயம் சம்பந்தமாக நீண்ட கால இடைவெளிக்குப் பின் மீண்டும் பெசப்படுவத்தட்கு ஆசாத் சாலி அவர்களுக்கு மிக்க நன்றி.
ReplyDelete'காலம் கடந்த ஞானம்' என்று சொன்னால் தவறில்லையே....??????
ReplyDeleteThanks sir
ReplyDelete